நெல்கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்டால் புகார் அளிக்கலாம்
நெல்கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்டால் விவசாயிகள் புகார் அளிக்கலாம் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் மகாபாரதி கூறினார்.
நெல்கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்டால் விவசாயிகள் புகார் அளிக்கலாம் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் மகாபாரதி கூறினார்.
நெற்பயிர்கள் சேதம்
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அதன் விவரம் வருமாறு:-வரதராஜன்:- சீர்காழி அகரவட்டாரம் கிராமத்தில் மயில்களால் நெற்பயிர்கள் ஆண்டுதோறும் சேதமடைந்து வருகிறது. இதனால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. அதற்கான இழப்பீடு வழங்க வேண்டும். ஆடு, மாடுகளால் பயிர்கள் சேதமடைவதை தடுக்க கிராமத்திற்கு பொதுபட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்க வேண்டும்.
கோபிகணேசன்:- வேளாண் எந்திரங்களுக்கான மானியம் முன்னேற்பு மானியமாக வழங்கியதற்கு அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். குறுவை தொகுப்பு திட்டம் வழங்குவதற்கான காலகெடுவை நீட்டிக்க வேண்டும். சான்றுபெற்ற விதை நெல்லில் குதிரைவாலி களை பயிர்களின் விதைகள் கலந்துவருவதை தடுக்க வேண்டும்.
காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதம்
கோவிந்தராஜன்:- சீர்காழி கழுமலையாற்றில் கழிவுநீர் விடப்படுவதை தடுக்க வேண்டும். சீர்காழி பகுதிகளில் பன்றிகளால் நெற்பயிர்கள் சேதமடைவதோடு மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. ராமலிங்கம்:- நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது பொதுப்பணித்துறையினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, குப்பைகள், கழிவுநீர் வாய்க்காலில் விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் நாராயணசாமி, பண்டரிநாதன், பூவலிங்கம்:- சீர்காழி தாலுகா பகுதியில் காட்டுப்பன்றிகள் அதிகரித்து விளைநிலங்கள், பயிர்களை சேதப்படுத்தி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் சோளம், வாழை, நெல் மற்றும் கிழங்குவகை பயிர்கள் என்று அனைத்தையும் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது. அவற்றை உடன் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லஞ்சம் கொடுப்பதை நிறுத்துங்கள்
ராஜேந்திரன், பாபு:- ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பருத்தி கொள்முதலில் எடை முறைகேடுகள் நடக்கிறது. அதிகாரிகள் வியாபாரிகளுக்கு சாதகமாக செயல்படுகின்றனர். எடையில் முறைகேடு நடப்பதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என்றனர்.
விவசாயிகள் கோரிக்கைகளுக்கு கலெக்டர் மகாபாரதி கூகையில், கொள்முதல் நிலையத்தில் மாமூல், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் முறைகேடு நடப்பதாக கூறுகிறீர்கள். அதனை தடுக்க விவசாயிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து லஞ்சம் கொடுப்பதை நிறுத்துங்கள்.
உறுதுணையாக இருப்பேன்
அதற்காக நான் உறுதுணையாக இருப்பேன். லஞ்சம் கொடுக்காமல் நெல்கொள்முதல் செய்யவில்லை என்றால் விவசாயிகள் எழுத்துபூர்வமாக புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகம், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.