உளுந்து பயிரில் விதைப்பண்ணை அமைத்து அதிக லாபம் பெறலாம்


உளுந்து பயிரில் விதைப்பண்ணை அமைத்து அதிக லாபம் பெறலாம்
x

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள், ரபி பருவத்தில் உளுந்து பயிரில் விதைப்பண்ணை அமைத்து அதிக லாபம் பெறலாம் என்று விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் கதிரேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம்


விவசாயிகளுக்கு தேவையான உளுந்து பயிரில் வம்பன் 4, வம்பன் 6, வம்பன் 8, வம்பன் 9, வம்பன் 11 ஆகிய ரகங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அதிகாரிகளை அணுகி மானிய விலையில் சான்று பெற்ற விதைகளை வாங்கி விதைப்பண்ணை அமைக்கலாம்.

உளுந்து ஏக்கருக்கு 8 கிலோ வீதம் 30 சென்டி மீட்டருக்கு 10 சென்டி மீட்டர் இடைவெளிவிட்டு விதைத்து சதுரமீட்டருக்கு 33 செடிகள் எண்ணிக்கை அடிப்படையில் பராமரிக்க வேண்டும். தொழில்நுட்பங்களை தவறாமல் கடைபிடித்தல், சான்று பெற்ற விதைகளை பயன்படுத்துதல், உயிர் உரம் மற்றும் பூஞ்சான விதைநேர்த்தி செய்தல், சரியான பயிர் எண்ணிக்கையை பராமரித்தல், பூக்கும் பருவத்தில் 2 சதவீதம் டி.ஏ.பி. கரைசல் தெளித்தல், களைகள் மற்றும் கலவன்களை நீக்குதல் ஆகியவற்றை சரியான நேரத்தில் செய்வதன் மூலம் கூடுதல் மகசூல் பெறலாம்.

அதிக லாபம்

இவ்வாறு உளுந்து பயிரில் விதைப்பண்ணை அமைத்து தரமான விதை உற்பத்தி செய்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு வழங்கினால் உள்ளூர் சந்தை விலையுடன் ஊக்கத்தொகை மற்றும் உற்பத்தி மானியம் ஆகியவை சேர்ந்து கூடுதல் லாபம் பெறலாம். எனவே விதைப்பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகள் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் உதவி விதை அலுவலரை அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story