செல்போனில் புகைப்படம் எடுத்து புகார் தெரிவிக்கலாம்
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் நபர்களை செல்போனில் புகைப்படம் எடுத்து புகார் தெரிவிக்கலாம் என்று உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா பேசினார்.
பொள்ளாச்சி,
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் நபர்களை செல்போனில் புகைப்படம் எடுத்து புகார் தெரிவிக்கலாம் என்று உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா பேசினார்.
கவனக்குறைவால் விபத்து
பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள 27 பள்ளிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குழு தொடங்கப்பட்டு உள்ளது. சாலை பாதுகாப்பு குறித்து பள்ளிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசும்போது கூறியதாவது:-
இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகமாக நடப்பதில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாணவ-மாணவிகள் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொள்ளாச்சி பகுதிகளில் கடந்த மாதம் 90 சதவீதம் கவனக்குறைவால் விபத்துகள் நடந்து உள்ளது. சாலைகள் மோசமாக இருந்தால் ஆசிரியர்கள் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புகார் தெரிவிக்கலாம்
பொள்ளாச்சி சரக உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா பேசும்போது கூறியதாவது:-
சாலை விதிகளை கடைப்பிடித்து வாகனங்களை ஓட்டினால் விபத்துகளை தடுக்கலாம். போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் குறித்து செல்போனில் புகைப்படம் எடுத்து அனுப்பி புகார் தெரிவிக்கலாம். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவிப்பதற்கு யாரும் பயப்பட தேவையில்லை. மாணவர்களால் தான் சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓட்டுனர் உரிமம்
வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் பேசும்போது,
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் கல்லூரி மாணவர்கள் வாகனங்களை ஓட்டக்கூடாது. 90 சதவீத விபத்துகள் 25 வயதிற்கு கீழ் உள்ள நபர்களால் தான் ஏற்படுகிறது. கடந்த 6 மாதத்தில் மீனாட்சிபுரம் ரோட்டில் நடந்த 13 விபத்துகளில் 6 பேர் உயிரிழந்தனர். ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்த பிறகு அந்த ரோட்டில் கடந்த 2 மாதங்களில் எந்த விபத்துகளும் ஏற்படவில்லை என்றனர். இதில் ஆசிரியை தேன்மொழி, மோட்டார் வாகன ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.