இளம் சாதனையாளர் கல்வி உதவித்தொகை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள் இளம் சாதனையாளர் கல்வி உதவித்தொகை விருது பெற விண்ணப்பிக்கலாம்.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது;-
பிரதமரின் துடிப்பான இந்தியாவிற்கான இளம் சாதனையாளர் கல்வி உதவித்தொகை விருது வழங்கும் திட்டத்தில் கீழ் கல்வி உதவித்தொகை தலைசிறந்த பள்ளிகளில் படிக்கும், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் இருந்து இந்த விருதை பெற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த உதவித்தொகையை பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தலைசிறந்த பள்ளிகளின் பெயர்பட்டியல் http://Yet.nta.ac.in என்ற இணைய பக்கத்தில் உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பள்ளிக்கட்டணம், விடுதி கட்டணம் உள்பட 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு அதிகப்பட்சமாக ரூ.75 ஆயிரமும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகப்பட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் வழங்கப்படும்.
தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை விருது வழங்கப்படுகிறது. இந்த தேர்வு பேப்பர் பென் ஓ.எம்.ஆர். மூலமாக நடைபெறும். நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த விருது பெற அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். திருத்தங்கள் மேற்கொள்ள அடுத்த மாதம் 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வு 29.9.2023 அன்று நடைபெறும்.
விண்ணப்பங்களுடன் செல்போன் எண், ஆதார் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண், வருமானவரி சான்று, சாதிச்சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும். இந்த திட்டம் குறித்து கூடுதல் தகவல்கள் பெற http://Yet.nta.ac.in மற்றும் https://socialjustice.gov.in/... என்ற இணைய பக்கங்களில் காணலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.