கழுத்தை நெரித்து பெண்ணை கொல்ல முயற்சி; சிறுவன் கைது


கழுத்தை நெரித்து பெண்ணை கொல்ல முயற்சி; சிறுவன் கைது
x

வீடு புகுந்து திருடியதை தடுத்ததால், கழுத்தை நெரித்து பெண்ணை கொல்ல முயன்ற 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

திண்டுக்கல்
வீடு புகுந்து திருடியதை தடுத்ததால், கழுத்தை நெரித்து பெண்ணை கொல்ல முயன்ற 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.


வீடு புகுந்து திருட்டு

நிலக்கோட்டை அருகே உள்ள மட்டப்பாறையை சேர்ந்தவர் தங்கவேலு. அவருடைய மனைவி ராசாத்தி (வயது 55). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கவேலு இறந்து விட்டார். இதனால் ராசாத்தி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் அவர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் ராசாத்தியின் வீட்டுக்குள் புகுந்து, சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டரை திருடி கொண்டிருந்தார்.

அப்போது சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த ராசாத்தி, வீட்டுக்குள் மர்மநபர் இருப்பதை பார்த்து திருடன், திருடன் என கத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், ராசாத்தியை தாக்கியதுடன், அவரது கழுத்தை நெரித்தார். இதில் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அந்த நபர், கியாஸ் சிலிண்டர்களை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

சிறுவன் கைது

இந்தநிலையில் நேற்று காலை ராசாத்தியின் வீடு வெகுநேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் பக்கத்து வீட்டில் வசிக்கும் அங்கம்மாள், அவரது வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது ராசாத்தி மயங்கி கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை அங்கம்மாள் தண்ணீர் தெளித்து எழுப்பினார்.

பின்னர் இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் ராசாத்தி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், கியாஸ் சிலிண்டர்களை திருடியதுடன், ராசாத்தியை கழுத்தை நெரித்து கொல்ல முயன்றது அதே ஊரை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவனை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story