வாலிபர் அடித்துக்கொலை


வாலிபர் அடித்துக்கொலை
x

கயத்தாறு அருகே வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் கொலை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தளவாய்புரம் நாற்கர சாலையில் பத்திரகாளி அம்மன் கோவில் முன்பு நேற்று காலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சங்கர், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர் கலாலட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தார்.

மோப்ப நாய்

வாலிபரின் தலை, கால்களில் ரத்தக்காயங்கள் இருந்தன. அவர் நீல நிறத்தில் வெள்ளை நிற புள்ளி போட்ட சட்டையும், நீலநிறத்தில் கட்டம் போட்ட லுங்கியும் அணிந்து இருந்தார். அவரது வலது கையில் ஆங்கிலத்தில் 'ஏ.எம்.' என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது. கையில் மஞ்சள், சிவப்பு நிற பிளாஸ்டிக் வளையம் அணிந்திருந்தார்.

வாலிபரின் உடல் கிடந்த இடத்தில் மதுபாட்டில்கள், பீடிகள், பொரித்த சிக்கன், கடலைமிட்டாய் போன்றவையும் கிடந்தன. இந்த கொலையில் துப்புதுலக்க போலீசாரின் மோப்ப நாய் சுனோ வரவழைக்கப்பட்டது. அது, வாலிபர் உடல் கிடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு, அருகில் உள்ள தோட்டம் வரையிலும் ஓடிச் சென்றது. ஆனாலும் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

கொலையாளிகளுக்கு வலைவீச்சு

கொலையான வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலையுண்ட வாலிபர் யார்? அவரை எதற்காக கொலை செய்தனர்? கொலையாளிகள் யார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலையில் துப்புதுலக்க போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

கயத்தாறு அருகே வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

---


Next Story