திருவண்ணாமலையில் பஸ்சில் தொங்கியபடி சென்ற இளைஞர்கள்
திருவண்ணாமலையில் பஸ்சில் தொங்கியபடி இளைஞர்கள் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
திருவண்ணாமலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி விடும் சமயத்தில் அரசு பஸ்களின் படிகளில் மாணவர்கள் பலர் தொங்கியபடி செல்வது வழக்கமாக நடைபெறும் சம்பவமாக உள்ளது.
திருவண்ணாமலையில் செங்கம் சாலையில் சென்ற அரசு பஸ்சில் இளைஞர்கள் படிகளிலும், ஜன்னல்களிலும் ஏறி தொங்கியபடி சென்றனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. படியில் இருந்து தவறி விழுந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற எந்தவித அச்சமும் இல்லாமல் அவர்கள் தங்களை ஹீரோவாக நினைத்துக் கொண்டு இதுபோன்ற சாகச செயல்களில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை போலீசாரும் கண்டுகொள்ளாமல் விடுவதால் இதுபோன்ற செயல்களில் இளைஞர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இதுகுறித்து மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.