போட்டிப்போட்டு கழுமரம் ஏறிய இளைஞர்கள்


போட்டிப்போட்டு கழுமரம் ஏறிய இளைஞர்கள்
x

வேடசந்தூர் அருகே முத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி, போட்டிப்போட்டு இளைஞர்கள் கழுமரம் ஏறினர்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே வெள்யைகவுண்டனூரில் முத்தாலம்மன், முனியப்பசுவாமி கோவில்கள் உள்ளன. இந்த கோவில் திருவிழாவையொட்டி, கடந்த 9-ந்தேதி இரவு அம்மன் கரகம் பாவித்து வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்தநிலையில் நேற்று கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.

இதையொட்டி கோவில் முன்பு 50 அடி உயரத்தில் கழுமரம் ஊன்றப்பட்டது. அதில், போட்டிப்போட்டு இளைஞர்கள் ஆர்வமுடன் ஏறினர். அப்போது அங்கு சுற்றி இருந்த பார்வையாளர்கள் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் இளைஞர்கள் பலர் கழுமரத்தில் ஏற முடியாமல் வழுக்கி கீழே விழுந்தனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு நவாமரத்துப்பட்டியை சேர்ந்த சந்தானம் என்ற வாலிபர், கழுமரத்தில் ஏறி அதன் உச்சியில் மஞ்சள் துணியில் கட்டி வைத்திருந்த ரொக்கப்பரிசை எடுத்தார். பின்னர் அவரை தூக்கி சுமந்தபடி கோவிலை சுற்றி இளைஞர்கள் வலம் வந்தனர்.

இதனையடுத்து மாலையில் மஞ்சள் நீராட்டுடன் அம்மன் கரகம் பூஞ்சோலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் மற்றும் வேடசந்தூர், திண்டுக்கல், குஜிலியம்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


Next Story