சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரின் மீது பைக் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரால் பரபரப்பு - வைரலாகும் வீடியோ
திருச்சி கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவர் மீது இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டார்.
திருச்சி,
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள முத்தரையர் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான இளைஞர்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். அதில் பலர் இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து சாகசங்களில் ஈடுபட்டு போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தினர்.
அந்த வகையில், கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவர் மீது இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டார். அதனை இருபுறமும் வாகனத்தில் சென்ற பிற இளைஞர்கள் செல்போனில் பதிவு செய்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை ஏன் கண்டு கொள்ளவில்லை, அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியை பொதுமக்கள் முன் வைத்துள்ளனர். வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தடுப்புச் சுவர் மீது வாகனம் ஓட்டிய இளைஞர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.