பதவி காலம் முடிவதற்குள் கனவுத்திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்...


பதவி காலம் முடிவதற்குள் கனவுத்திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்...
x

மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டத்தில், தங்கள் பகுதியின் கனவுத் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள ஒன்றியக்குழு துணைத்தலைவர் அழைப்பு விடுத்தார்.

திருப்பூர்

போடிப்பட்டி

மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டத்தில், தங்கள் பகுதியின் கனவுத் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள ஒன்றியக்குழு துணைத்தலைவர் அழைப்பு விடுத்தார்.

குடிநீர் பிரச்சினை

மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற ஒன்றியக்குழு சாதாரண கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் காவியா அய்யப்பன் தலைமை தாங்கினார்.ஒன்றியக்குழு துணைத் தலைவர் கே.ஈஸ்வரசாமி, ஒன்றிய ஆணையாளர் எத்திராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) ரொனால்டு ஷெல்டன் பெர்னாண்டஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள், குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடையார்பாளையம் குடிநீர்த் தொட்டியில் 7 ½ எச்பி மோட்டாருக்கு பதிலாக 5 எச்பி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதால் குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படுகிறது.அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.துங்காவி அரசு ஆஸ்பத்திரியை ஆம்புலன்ஸ் வசதியுடன் கூடியதாக தரம் உயர்த்த வேண்டும்.சோழமாதேவி ஆற்றுக்கு செல்லும் வழித்தடத்தை சீரமைத்துத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கனவுத்திட்டம்

இதனைத் தொடர்ந்து பேசிய ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஈஸ்வரசாமி கூறியதாவது 'ஒன்றிய பொது நிதியிலிருந்து அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.எந்த பணியும் தொய்வில்லாமல் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக செயல்பட்டு வருகிறோம்.வேடப்பட்டி-ஜோத்தம்பட்டி வழித்தடத்தில் ரூ 40 லட்சம் செலவில் சாலை மற்றும் பாலம், காரத்தொழுவு, சோழமாதேவி பகுதிகளில் பொதுமக்கள் வசதிக்காக அமராவதி ஆற்றில் படித்துறை அமைக்கும் பணிகளும் நடைபெறவுள்ளது.கோடை காலம் உட்பட எந்த காலத்திலும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமலிருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.வேளாண்மைத்துறை மூலம் வழங்கப்படும் விதை, உரம் உள்ளிட்ட மானியத் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்று சேர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அத்துடன் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற கனவுத் திட்டம் வைத்திருந்தால் அதுகுறித்து தெரிவிக்கலாம்.அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.'என்று கூறினார்.கூட்டத்தில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Next Story