அரசு பஸ்சை மறித்து டிரைவர்-கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது
அரசு பஸ்சை மறித்து டிரைவர்-கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தா.பழூர்:
டிரைவர்-கண்டக்டர் மீது தாக்குதல்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோட்டியால் வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் ராஜ்குமார்(வயது 34). இவர் நேற்று முன்தினம் மதியம் கோட்டியால் செக்கடி பஸ் நிறுத்தத்தில் நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக சுத்தமல்லியில் இருந்து தா.பழூர் வழியாக ஜெயங்கொண்டம் செல்லும் அரசு டவுன் பஸ்சை கோடாலிகருப்பூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் கல்யாணசுந்தரம் ஓட்டி வந்துள்ளார்.
செக்கடி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, அந்த பஸ்சை ராஜ்குமார் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை தட்டிக்கேட்ட டிரைவர் கல்யாணசுந்தரத்தை அவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. அதை தடுக்க வந்த கண்டக்டர் துரைராஜையும், ராஜ்குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் ராஜ்குமாரை அப்புறப்படுத்தி, டிரைவர் மற்றும் கண்டக்டரை மீட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வாலிபர் கைது
இதையடுத்து, ராஜ்குமார் குடிபோதையில் தன்னை தாக்கியதாகவும், தன்னை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், தடுக்க வந்த கண்டக்டரை தாக்கியதாகவும் டிரைவர் கல்யாணசுந்தரம், தா.பழூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, காயம் ஏற்படுத்தும் நோக்கில் தாக்கியது, தகாத வார்த்தைகளில் திட்டியது ஆகிய பிரிவுகளில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து, ராஜ்குமாரை கைது செய்தார்.