தனியார் பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
கறம்பக்குடி அருகே நிற்காமல் சென்றதால் தனியார் பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நிற்காமல் சென்ற பஸ்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள செம்பட்டி விடுதி நால்ரோடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 42). இவர் புதுக்கோட்டையிலிருந்து கறம்பக்குடி வழியாக பட்டுக்கோட்டை செல்லும் தனியார் பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கறம்பக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு பஸ்சை இயக்கி சென்றார்.
மழையூர் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பஸ் புறப்பட்டபோது பின்னால் அதிரான்விடுதி கிராமத்தை சேர்ந்த சூர்யா (21) என்பவர் தனது நண்பரை பஸ்சில் ஏற்றி விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்று பஸ்சை நிறுத்த கூறியுள்ளார். ஆனால் பஸ் நிற்காமல் சென்றுவிட்டது.
வாலிபர் கைது
இந்த நிலையில் அந்த பஸ் புதுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடிக்கு திரும்பி சென்ற போது மழையூர் பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது அங்கு வந்த சூர்யா ஏன் பஸ்சை நிறுத்தவில்லை என்று கூறி ஆத்திரம் அடைந்து டிரைவர் சுரேஷ்குமாருடன் தகராறில் ஈடுபட்டதுடன் பஸ் கண்ணாடியை உருட்டுக்கட்டையால் அடித்து உடைத்தார். இதில் பஸ்சின் முகப்பு கண்ணாடி நொறுங்கியது.
இதுகுறித்து டிரைவர் சுரேஷ்குமார் மழையூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்த சூர்யாவை கைது செய்தார். பின்னர் அவர் ஆலங்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.