பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
தூத்துக்குடியில் பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சத்யாநகரை சேர்ந்தவர் குயின் (வயது 40). இவர் கடந்த 6 மாதமாக கணவரை பிரிந்து சத்யாநகரில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். அப்போது, தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு கீதாஜீவன்நகரை சேர்ந்த ரவுடி உதயா என்ற உதயமூர்த்தி (23) என்பவருடன் பழகி வந்தாராம். இந்த நிலையில் உதயா என்ற உதயமூர்த்தியை தென்பாகம் போலீசார் ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கில் உதயா என்ற உதயமூர்த்தியை, குயின் ஜாமீனில் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த உதயா என்ற உதயமூர்த்தி ஜாமீனில் வந்தவுடன் குயினை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த குயின் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.