மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வாலிபர் கைது


மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வாலிபர் கைது
x

திருமயம் அருகே மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 16 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை

தனிப்படை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் புதுமனை ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் வசந்தா (வயது 62). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி வீட்டில் கழுத்து நெறிக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலும் வீட்டில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள், ஹார்டு டிஸ்க் ஆகியவையும் திருடப்பட்டிருந்தன. இது தொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

வாலிபர் கைது

இந்த நிலையில் மூதாட்டியை கொலை செய்தது சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரை சேர்ந்த அம்மாசி மகன் சிவக்குமார் (27) என தெரியவந்தது. மேலும் இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பிற்காக வசந்தா வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்த வந்ததும், இதில் அவர் தனியாக இருந்ததை நோட்டமிட்டு கொண்டு பணத்தேவைக்காக கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மேலும் போலீசில் சிக்காமல் இருக்க தான் பொருத்திய கண்காணிப்பு கேமராக்களையும், ஹார்டு டிஸ்க்கையும் திருடிச்சென்றார். இதையடுத்து சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் 16 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர். கண்காணிப்பு கேமராக்கள், 2 செல்போன்கள் ஆகியவற்றையும் கைப்பற்றினர்.

பாராட்டு

கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தி ஒரு கிணற்றில் போடப்பட்டிருந்ததை போலீசார் கைப்பற்றி எடுத்தது குறிப்பிடத்தக்கது. மூதாட்டி கொலை வழக்கில் கொலையாளியை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டினார். மேலும் ரொக்க வெகுமதி அளித்தார்.


Next Story