சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
சூலூர் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
சூலூர்
சூலூர் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சிறுவனுக்கு பாலியல் தொல்லை
கோவையை அடுத்த சூலூர் அருகே பாப்பம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது19). கூலி தொழிலாளி. இவர், அந்த கிராமத்தின் அருகே உள்ள ஒரு பள்ளியின் அருகே 2-ம் வகுப்பு படித்து வரும் 7 வயது சிறுவனுடன் விளையாடிக்கொண்டு இருந்தார்.
அப்போது அந்த சிறுவனை தனியாக அழைத்துச்சென்ற சூர்யா, பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதனால் அந்த சிறுவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து சிறுவனிடம் பெற்றோர் கேட்டபோது, சூர்யா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை கூறி அழுதான்.
போக்சோவில் கைது
அதைகேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சூலூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சூர்யா, அந்த 7 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
இது குறித்து சூலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சூர்யாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சூலூர் அருகே 7 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.