3 பேரை கத்தியால் குத்திய வாலிபர் கைது
பெண்ணாடம் அருகே 3 பேரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் அருகே தாழநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையன் (வயது 32). இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் தாழநல்லூர் கிராமத்தில் உறவினர் ஒருவரின் திருமண விழாவுக்கு ராஜேஸ்வரி மற்றும் அவரது தாய் மாரியம்மாள், சித்தி மகன் குப்புராஜ் (22) ஆகியோர் சென்றனர். அப்போது அங்கு சென்ற முத்தையன் ராஜேஸ்வரியிடம் நாம் சேர்ந்து வாழலாம் என கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் தனது நகைகளை தருமாறு முத்தையனிடம் ராஜேஸ்வரி கேட்டுள்ளார். இந்த நிலையில் ராஜேஸ்வரியின் ½ பவுன் நகையை கொடுக்கும்படி குப்புராஜ் முத்தையனிடம் கேட்டுள்ளார். அதற்கு நகையை கேட்க நீ யார் என்று முத்தையன் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
கைது
இதில் ஆத்திரமடைந்த குப்புராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முத்தையனை குத்தினார். மேலும் அதனை தடுக்க வந்த அதே பகுதியை சேர்ந்த பச்சமுத்து, மணிகண்டன் ஆகியோரையும் கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் ராஜேஸ்வரி, மாரியம்மாள், குப்புராஜ் ஆகிய 3 பேர் மீது பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதில் குப்புராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பதகராறில் 3 பேரை லாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.