தாயை கத்தியால் குத்திய வாலிபர் கைது
ஆத்தூர்:-
ஆத்தூர் ரெயிலடி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 57). இவர் தனது மனைவி விஜயா, மகன் விவேக் (32) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் விஜயா ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் காயத்துடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் ஆத்தூர் டவுன் போலீசில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். அதில், தனது மகன் விவேக் வேலைக்கு செல்லாமல் தினமும் மதுபானம் குடித்து விட்டு வந்து என்னுடனும், எனது கணவருடனும் தகராறில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்து வந்தார். எனது மருமகள் விவேக்கை விட்டு பிரிந்து சென்று விட்டார். கடந்த 13-ந் தேதி இரவு 11 மணிக்கு மது குடித்து விட்டு வந்த விவேக், எனது கணவர் மகேந்திரனை தந்தை என்றும் பார்க்காமல் அடித்து உதைத்து தாக்கினார். ேமலும் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து எனது கணவரை குத்த முயன்றார். இதை தடுக்க சென்ற என்னை மகன் கத்தியால் குத்தினார். அப்போது விவேக்கின் மகனும், எனது பேரனுமான கைலன் (4) கையிலும் காயம் ஏற்பட்டது. எனவே எனது மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது. இந்த புகார் குறித்து ஆத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் ஆகியோர் விவேக் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.