இளம் பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது
இளம் பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது
கே.ஜி.சாவடி
கோவையில் இளம் பெண்ணை பிறந்தநாள் வாழ்த்து கூற அழைத்து கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தூய்மை பணியாளர்
கோவை குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூரை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அதேபகுதியை சேர்ந்தவர் தூய்மை பணியாளர் சதீஷ்குமார் (வயது 33).
இந்தநிலையில் சதீஷ்குமாருக்கு அந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். காதலிக்கும் போது சதீஷ்குமார் தனக்கு திருமணமானதை மறைத்து இளம்பெண்ணிடம் பழகி வந்துள்ளதாக தெரிகிறது. இது இளம்பெண்ணுக்கு தெரியவரவே அவர் அதிர்ச்சியடைந்தார்.
பிறந்தநாள் வாழ்த்து
இதையடுத்து அவர் சதீஷ்குமாருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து விலகி சென்றார். மேலும் இளம்பெண்ணுக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இது சதீஷ்குமாருக்கு தெரிய வந்தது. இதனால் அவருக்கு இளம்பெண் மீது கோபம் ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இளம்பெண்ணுக்கு பிறந்தநாள். இதனை அறிந்த சதீஷ்குமார், இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கூற வேண்டும். அதன்பிறகு உன்னிடம் பேசமாட்டேன் என்று கூறி அழைத்ததாக தெரிகிறது. இதைநம்பி அந்த இளம்பெண் வந்தார்.
கத்திக்குத்து
அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணை சரமாரியாக குத்தினார். இதில் இளம் பெண் கழுத்து, இடுப்பு பகுதிகளில் பலத்த காயம் அடைந்தார்.
பின்னர் சதீஷ்குமாரே அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
இதுகுறித்து கே.ஜி.சாவடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி சதீஷ்குமாரை கைது செய்தனர். பிறந்தநாள் வாழ்த்து கூறுவதாக அழைத்து காதலியை கத்தியால் வாலிபர் ஒருவர் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.