10 பவுன் நகை திருடிய வாலிபர் கைது
காய்கறி வியாபாரி வீட்டில் 10 பவுன் நகையை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
காய்கறி வியாபாரி வீட்டில் 10 பவுன் நகையை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வியாபாரி வீட்டில் திருட்டு
பொள்ளாச்சியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி ஞானசெல்வி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் வீட்டை பூட்டி விட்டு, ஞானசெல்வி, கணவரை சாப்பிட கூப்பிட மார்க்கெட்டிற்கு சென்றார்.
பின்னர் சாப்பிட வந்த முருகானந்தம் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
காவலில் எடுத்து விசாரணை
விசாரணையில் சென்னை தி நகரை சேர்ந்த கார்த்திக் (வயது 29) என்பவர் நகையை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் அவர் சேலம் மத்திய சிறையில் இருப்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் கோர்ட்டு அனுமதியை பெற்று சேலம் சிறையில் இருந்த அவரை காவலில் எடுத்து இன்ஸ்பெக்டர் மணிக்குமார் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் காய்கறி வியாபாரி வீட்டில் திருடிய நகைகளை மதுரையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை மதுரைக்கு அழைத்து சென்று திருட்டு நகைகளை மீட்டனர். பின்னர் போலீசார் அவரை மீண்டும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.