பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த வாலிபர் கைது
முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் பப்ஜி விளையாட பணம் தேவைப்பட்டதால் நகையை திருடியதாக வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
கிணத்துக்கடவு,
முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் பப்ஜி விளையாட பணம் தேவைப்பட்டதால் நகையை திருடியதாக வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
5 பவுன் நகை பறிப்பு
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே வடபுதூர் ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி சரோஜா வயது (வயது 52). இவர் நேற்று முன்தினம் வடபுதூரிலிருந்து சிங்கையன்பதூர் செல்லும் ரோட்டில் பாறைக்குழி அருகே மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர், முகவரி கேட்பது போல் நடித்து சரோஜா கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு சென்றார்.
இதுகுறித்து சரோஜா கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வாலிபரை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் சம்பவம் நடந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். அங்கிருந்து கோவை மெயின் ரோட்டுக்கு வரும் பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த 15 கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
வாலிபர் கைது
இதில் நகை பறித்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் எண் பதிவாகி இருந்தது. இதை வைத்து போலீசார் விசாரித்ததில், அந்த மோட்டார் சைக்கிள் கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவருடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று ஒருவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிங்காநல்லூர் வசந்தாமில் ரோடு பகுதியை சேர்ந்த வெற்றிவேல் என்பவரது மகன் சரவண் (வயது 24) என்பதும், சரோஜாவிடம் திருடிய நகை வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து நகை, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் போலீசார் வாலிபரை கைது செய்தனர். மேலும் அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
கோவை தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து விட்டு, இருகூரில் உள்ள கூரியர் நிறுவனத்தில் சரவண் பணிபுரிந்து வருகிறார். அவர் செல்போனில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகி விட்டார். அந்த விளையாட்டில், விளையாட்டு பொருட்கள் வாங்க பணம் தேவைப்பட்டு உள்ளது. அவருக்கு கிடைக்கும் சம்பளம் பணம் முழுவதையும் தாயாரிடம் கொடுத்து வந்துள்ளார்.
போலீசில் சிக்கினார்
இதனால் தன்னிடம் பணம் இல்லாததால், கிராம பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகையை பறிக்க திட்டமிட்டு உள்ளார். அதன்படி சரோஜாவிடம் 5 பவுன் நகையை பறித்துள்ளார். தொடர்ந்து நேற்று கோவை பெரிய கடை வீதியில் நகையை விற்பதற்காக சென்ற போது சரவண் போலீசில் சிக்கிக்கொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.