விலை உயர்ந்த சைக்கிளை திருடிய வாலிபர் கைது
துடியலூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் விலை உயர்ந்த சைக்கிளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
துடியலூர்
கோவை துடியலூர் அருகே என்.ஜி.ஜி.ஓ. காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் நடேஷ் குமார் (வயது 42). இவர் சரவணம்பட்டியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது விலை உயர்ந்த சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு, அடுக்குமாடி குடியிருப்பின் கீழே தனது சைக்கிளை நிறுத்தியிருந்தார். இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம் ஆகும்.
இந்த நிலையில் நடேஷ்குமார் வீட்டிற்குள் சென்றுவிட்டு, சிறிது நேரம் கழித்து கீழே வந்தார். அப்போது அவரது விலை உயர்ந்த சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருடிக்கொண்டு தப்ப முயன்றார். உடனே அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை கையும், களவுமாக பிடித்து துடியலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் வெற்றிலை காளிபாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சூர்யா (23) என்பதும், சைக்கிளை திருடிக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.