நண்பர் வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது

நண்பர் வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது
கோவை
கோவை ராமநாதபுரம் சக்தி நகரை சேர்ந்தவர் வினோத் (வயது 36). இவரது மனைவி ராகப்பிரியா (33). சம்பவத்தன்று ராகப்பிரியாமேட்டுப்பாளையத்தில் உடல் நலம் பாதித்த தனது உறவினர் ஒருவரை பார்க்க சென்றார்.
அப்போது வீட்டில் இருந்த அவரது கணவர் வினோத், தனது நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர் வினோத்தின் நண்பர்கள் சென்று விட்டனர். இதனையடுத்து கடந்த 3-ந் தேதி ராகப்பிரியா கோவையில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டு அலமாரியில் இருந்த 3 பவுன் தங்க நகையை காணவில்லை.
இதுகுறித்து தனது கணவரிடம் ராகப்பிரியா விசாரித்தார். அப்போது தனது கணவர் வினோத்தின் நண்பர்கள் வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது. அவர்களில் ஒருவர் நகையை திருடி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து ராகப்பிரியா ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், நண்பர் வீட்டில் நகை திருடியது நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பீஸ்மர் (32) என்பது தெரியவந்தது. இவர் கோவையில் தங்கி ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதையடுத்து போலீசார் பீஸ்மரை கைது செய்தனர்.






