பெண்களிடம் நகை பறித்த வாலிபர் கைது
கோவைக்கு ரெயிலில் வந்து இருசக்கர வாகனங்களை திருடி பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை
கோவைக்கு ரெயிலில் வந்து இருசக்கர வாகனங்களை திருடி பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
நகை பறிப்பு
கோவை மாநகரில் ரேஸ்கோர்ஸ், ரத்தினபுரி, காட்டூர் போலீஸ் நிலைய பகுதியில் ஒரே நாளில் 3 பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்தது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் 3 பெண்களிடமும் நகை பறித்தது தெரிய வந்தது.
அந்த குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் சந்தீஷ் மேற்பார்வையில் உதவி கமிஷனர் கணேசன் தலைமையில் 9 பேர் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
4 பேர் கும்பல்
மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அதில் நகை பறிப்பில் ஈடுபட்டது மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மலாங் யாசர் ஜாப்ரி (வயது 23), பிரத்மேஷ் (24), மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமீர் என்ற சிக்கு (22), ஆந்திராவை சேர்ந்த உசேன் அலி ஷேக் (19) ஆகியோர் கொண்ட கும்பல் என்பது தெரியவந்தது.
உடனே தனிப்படை போலீசார் ஆந்திரா, மத்திய பிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் கோவைக்கு வந்து நகை பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் மீது ஏராளமான நகை பறிப்பு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.
வாலிபர் கைது
இந்த நிலையில் கோவை சரவணம்பட்டியில் நேற்று காலையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி னார். அவரை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர் ஆந்திராவை சேர்ந்த உசேன் அலி ஷேக் என்பதும், அவர் ரெயிலில் கோவை வந்து பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
உடனே அவரை போலீசார் கைது செய்தனர். விபத்தில் காயம் அடைந்த அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இது தொடர்பாக கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரெயிலில் வந்தனர்
மலாங் யாசர் ஜாப்ரி தலைமையில் 4 பேர் நகை பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் மீது மராட்டிய மாநிலம் பிவாண்டியில் மட்டும் 25 வழக்குகள் உள்ளன. இதுதவிர ஆந்திரா, மத்திய பிரதேசம் மற்றும் தர்மபுரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் வழக்குகள் இருக்கின்றன.
இவர்கள் குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோவை வந்து 3 இரு சக்கர வாகனங்களை திருடி உள்ளனர். அதில் சென்று 3 பெண்க ளிடம் நகை பறித்து உள்ளனர். அதன்பிறகு 2 இருசக்கர வாகனங் களை விட்டுவிட்டு, ஒன்றை மறைத்து வைத்துவிட்டு சென்றனர்.
விரைவில் சிக்குவர்
பின்னர் உசேன் அலி ஷேக் மட்டும் கோவை வந்து தாங்கள் மறைத்து வைத்த இருசக்கர வாகனத்தை எடுத்து சரவணம்பட் டிக்கு சென்றபோது விபத்தில் சிக்கி பிடிபட்டார். அவருடைய வங்கி கணக்கில் இருக்கும் ரூ.30 ஆயிரத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கும்பல் ஒரு மாநிலத்தில் திருடி விட்டு உடனே வேறு மாநிலத்துக்கு செல்வதால் இதுவரை போலீசில் சிக்காமல் இருந்துள்ளனர்.
உசேன் அலி ஷேக்கின் கூட்டாளிகளின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். தலைமறைவாக இருக்கும் 3 பேரையும் விரைவில் கைது செய்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.