மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
வேலூரில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மெயின்பஜாரை சேர்ந்தவர் கிரிதரன் (வயது 29), மெக்கானிக். இவர் கடந்த ஜூன் மாதம் கோட்டை மைதானத்தில் நடந்த பொருட்காட்சியை பார்க்க சென்றார். அப்போது தனது மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். சிறிதுநேரத்துக்கு பின்னர் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அஜந்தா மற்றும் போலீசார் வேலூர் மீன்மார்க்கெட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வாலிபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்தனர். அதில், அந்த மோட்டார் சைக்கிள் கிரிதரனுக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் விசாரித்தனர். அதில், அவர் முள்ளிப்பாளையம் கே.கே.நகரை சேர்ந்த சரண்ராஜ் (30) என்பதும், கிரிதரன் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.