மூதாட்டியிடம் நகை பறிப்பு வழக்கில் வாலிபர் கைது - தங்க நகை, மோட்டார் சைக்கிள் பறிமுதல்


மூதாட்டியிடம் நகை பறிப்பு வழக்கில் வாலிபர் கைது - தங்க நகை, மோட்டார் சைக்கிள் பறிமுதல்
x

மூதாட்டியிடம் நகை பறிப்பு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து தங்க நகை மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் காந்தி நகர் பகுதியில் கடந்த 15-ந்தேதி சிங்கபெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மனைவி குணசுந்தரி பிறந்த நாள் விழாவுக்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் குணசுந்தரி அணிந்து இருந்த தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பிச் சென்றார்.

இதுகுறித்து அவரது கணவர் பாலகிருஷ்ணன் காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் குற்றவாளியை விரைந்து பிடிக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர் வழிகாட்டுதலில் தாலுகா இன்ஸ்பெக்டர் பேசில் பிரேம் ஆனந்த் தலைமையில் எஸ்.துளசி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசார் நாகராஜ், மதிவாணன் ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

மேலும் அந்த பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் காஞ்சீபுரத்தை அடுத்த திருப்பருத்திக் குன்றம் பகுதியை சேர்ந்த வாசுதேவன் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து தங்க நகை மற்றும் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். குற்றவாளியை காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.


Next Story