12 வெடிகுண்டுகளுடன் வாலிபர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 12 வெடிகுண்டுகளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 12 வெடிகுண்டுகளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நாட்டு வெடிகுண்டுகள்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செம்பட்டையன்கால் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (வயது 23). இவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வேட்டையாடப்பட்ட காட்டுப்பன்றி இறைச்சி இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் கிருஷ்ணன்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீசாரும், வனத்துறையினரும் இணைந்து கார்த்திக் ராஜா வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர்.
அப்போது சமைத்து வேகவைக்கப்பட்ட காட்டுப்பன்றி கறி இருந்தது. மேலும் அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 12 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அவை தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணை
நாட்டு வெடிகுண்டுகளை அப்புறப்படுத்த வெடிகுண்டு தடுப்பு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், வெடிகுண்டுகளை அங்கிருந்து பாதுகாப்பாக எடுத்துச்சென்றனர்.
வெடிகுண்டுகள் வைத்திருந்தது தொடர்பாக வனத்துறையால் கார்த்திக் ராஜா கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏற்கனவே வன விலங்குகளை வேட்டையாடியதாக வழக்குகள் உள்ளதாக தெரிகிறது. அவரிடம் வனத்துறை ரேஞ்சர் கார்த்திக், வனத்துறை அதிகாரி பாரதி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.
பறிமுதல் செய்யப்பட்ட 12 நாட்டு வெடிகுண்டுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பார்வையிட்டார். மேலும் போலீஸ் அதிகாரிகளுடன் இது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தினார். நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.