வீடு புகுந்து தாக்கியதில் காயம் அடைந்த வாலிபர் சாவு


வீடு புகுந்து தாக்கியதில் காயம் அடைந்த வாலிபர் சாவு
x

திருச்சியில் வீடு புகுந்து தாக்கியதில் காயம் அடைந்த வாலிபர் பலியானார். அவரது உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

திருச்சியில் வீடு புகுந்து தாக்கியதில் காயம் அடைந்த வாலிபர் பலியானார். அவரது உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடு புகுந்து தாக்குதல்

திருச்சி உறையூர் நாச்சியார்பாளையத்தை சேர்ந்தவர் பிலால் (வயது 43). இவரது மனைவி பரிதாபேகம். இவர்களுக்கு முகமதுரியாஸ் (22) என்ற மகனும், ரிஸ்வானா என்ற மகளும் உள்ளனர். முகமது ரியாஸ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். ரிஸ்வானாவுக்கு உறையூரை சேர்ந்த ரியாஸ் என்ற வாலிபருடன் கடந்த மாதம் 28-ந் தேதி திருமணம் செய்ய பெற்றோரால் முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இருவீட்டார் தரப்பிலும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, திருமண ஏற்பாடுகளை பாதியிலேயே நிறுத்தினர். இதையடுத்து கடந்த மாதம் 23-ந் தேதி இரவு மணமகன் ரியாஸ், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட சிலர் மணப்பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து முகமது ரியாஸ் மற்றும் அவரது தந்தை பிலால் ஆகியோரை சரமாரியாக தாக்கியதுடன், வீட்டில் இருந்த பொருட்களையும் நொறுக்கி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

உறையூர் போலீசில் புகார்

இதில் படுகாயம் அடைந்த பிலாலும், முகமதுரியாசும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து பிலால் உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் உறையூர் போலீசார் ரியாஸ், அப்பாஸ், அன்சாரி, மாபுஷா, முஜிபூர்ரகுமான், பிலால், பீர்முகமது, ஜாபர், இம்ரான் ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய முகமது ரியாஸ் அவ்வப்போது தலைவலியால் அவதி அடைந்து வந்துள்ளார்.

கடந்த 19-ந் தேதி சேலம் சென்ற முகமது ரியாஸ் அங்கு திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று பகல் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அரசு மருத்துவமனையில் போராட்டம்

இது பற்றி அறிந்த முகமதுரியாஸின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் அரசு மருத்துவமனையில் திரண்டனர். கடந்த மாதம் முகமது ரியாஸை 10-க்கும் மேற்பட்டவர்கள் தாக்கியதால் அவருக்கு தலையில் உள்காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தான் அவர் உயிரிழந்துள்ளார். அவரை தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும். அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த உறையூர் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை தொடர்ந்து, அவர்கள் சமாதானம் அடைந்தனர். இந்த சம்பவம் அரசு மருத்துவமனையில் நேற்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story