தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது


தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 April 2023 6:45 PM GMT (Updated: 13 April 2023 9:55 AM GMT)

வைத்தீஸ்வரன் கோவிலில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

வைத்தீஸ்வரன் கோவிலில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருட்டு

சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோவிலில் பிரசித்தி பெற்ற வைத்தியநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற செவ்வாய் தலமான இங்கு செவ்வாய்க்கிழமை தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சிறப்பு வழிபாடு செய்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக செவ்வாய்க்கிழமை அன்று கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மர்ம நபர் ஒருவர் செல்போன், பர்ஸ் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளார்.

போலீசில் புகார்

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அந்த மர்ம நபரை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

கைது

அப்போது கோவிலில் உள்ள சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளில் சுமார் 3 மணி நேரம் ஒரு நபர் சுற்றிக் கொண்டிருந்ததை கண்ட போலீசார் அவரை பிடிக்க முயற்சி செய்தபோது ஒரு நபரின் பர்சை அந்த நபர் திருடியுள்ளார்.

அப்போது அவரை கையும் களவுமாக போலீசார் பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது அந்த நபர் திருச்சி உறையூரை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் ஆனந்தன். (வயது 35). என்பதும் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ஆனந்தனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story