மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
சிறுகனூர் அருகே உள்ள பெருவளப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் மதிவாணன். விவசாயி. இவரிடம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த தத்தனூர் பகுதியை சேர்ந்த இன்பம் மகன் சரத்குமார் (வயது 24) என்பவர் கடந்த 1½ ஆண்டுகளாக ஆடுகளை மேய்க்கும் வேலை பார்த்து வந்தார். நேற்று சரத்குமார் வயலில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். அப்போது, அவர் கட்டுக்கம்பியை அங்குள்ள மின் மோட்டார் பெட்டியின் மீது வைத்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனைடுத்து சரத்குமாரின் உடலை உறவினர்கள் சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய முடிவு செய்தனர். தொடர்ந்து, இறுதிச்சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்தனர். இந்நிலையில், இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சிறுகனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.இதை தொடர்ந்து அங்கு சென்ற சிறுகனூர் போலீசார் சரத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.