இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து திருமணம் செய்த வாலிபர் 'திடீர்' சாவு - மனைவியை தேடி வந்தபோது பரிதாபம்


இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து திருமணம் செய்த வாலிபர் திடீர் சாவு - மனைவியை தேடி வந்தபோது பரிதாபம்
x

‘இன்ஸ்டாகிராம்’ மூலம் காதலித்து திருமணம் செய்த வாலிபர் மனைவியை தேடி வந்தபோது இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை

வாணாபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஊருட்டு அம்பலம் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன் மகன் பிரசாந்த் (வயது 34). இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் 'இன்ஸ்டாகிராம்' மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் 'இன்ஸ்டாகிராமில்' காதல் வார்த்தைகளை பரிமாறி காதலை வளர்த்து வந்தனர். கடந்த மாதம் அந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் காதலனை தேடி அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஊருட்டுஅம்பலம் பகுதிக்கு சென்றார்.

அங்கு பிரசாந்தும் அவரும் கடந்த மாதம் 5-ந் தேதி மண்ணண்டி கோணத்தில் உள்ள மாசாணிஅம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

திருமணம் செய்த நாள் முதல் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 23-ந்தேதி அந்த பெண் தனது ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டார். அதன்பின் அவர் மீண்டும் பிரசாந்தை பார்க்கச் செல்லவில்லை.

இதனால் தனது காதல் மனைவியை தேடி பிரசாந்த் தீபாவளியன்று பெண்ணின் வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் தனது மனைவி இங்கு வந்தாரா என்று கேட்டபோது வரவில்லை என்று கூறினர்.

இதனால்வேதனை அடைந்த பிரசாந்த் சென்னை செல்வதற்காக புறப்பட்டார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் பெருந்துறைபட்டு அந்தோணியார்புரம் செல்லும் சாலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் பிரசாந்தை மீட்டு அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தண்டராம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பிரசாந்த் இறந்து விட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த அவரது தந்தை சுரேந்திரன் சங்கராபுரம் வந்தார். பிரசாந்த் உடல்நலக்குறைவுடன் அமர்ந்திருந்த இடம் திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் சுரேந்திரனிடம் அங்கு சென்று புகார் அளிக்கும்படி போலீசார் தெரிவித்தனர்.

அதன்படி வாணாபுரம் போலீஸ் நிலையத்தில் சுரேந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உதயசூரியன் வழக்குப் பதிவு செய்தார்.

திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே புது மாப்பிள்ளை உயிரிழந்து இருப்பதால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா?அல்லது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து வாணாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'இன்ஸ்டாகிராம்' மூலம் காதலித்து திருமணம் செய்த ஒரு மாதத்தில் புது மாப்பிள்ளை இறந்த சம்பவம் பிரசாந்தின் உறவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story