வாலிபர் படுகொலை; நண்பருக்கும் வெட்டு


வாலிபர் படுகொலை; நண்பருக்கும் வெட்டு
x

திருமங்கலம் அருகே வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். வெட்டு விழுந்ததில் அவருடைய நண்பரும் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக காரில் தப்பிய 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். வெட்டு விழுந்ததில் அவருடைய நண்பரும் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக காரில் தப்பிய 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

முன்விரோதம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா (வயது 35). இவருடைய மனைவி முகிலா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் பாரதிராஜாவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த சந்தனபாண்டியன் என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

2 மாதத்திற்கு முன்பு கோவில் திருவிழாவில் ஒலிபெருக்கி மூலம் பாடல் போடுவதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பாரதிராஜா தலைமறைவானார். நேற்று முன்தினம் ஜாமீன் பெற்று, டி.புதுப்பட்டிக்கு பாரதிராஜா வந்துள்ளார்.

வெட்டிக்கொலை

நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் அங்குள்ள டீக்கடை ஒன்றில் தனது நண்பர் சரவணகுமாருடன் பாரதிராஜா பேசிக்கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 6 பேர் கும்பல், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கீழே இறங்கினார்கள். கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் பாரதிராஜாவை சரமாரியாக வெட்டினர். இதில் முகம், நெஞ்சு, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு பாரதிராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை தடுக்க முயன்ற சரவணகுமாரையும் வெட்டினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். உடனே அந்த கும்பல் அங்கிருந்து காரில் தப்பி சென்றுவிட்டது.

6 பேருக்கு வலைவீச்சு

இது குறித்து தகவல் அறிந்ததும் திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரவணகுமாரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவிக்கு பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட பாரதிராஜாவின் உடல், திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக ெகாண்டு செல்லப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், ஏற்கனவே இருந்த முன்விரோதத்தில் சந்தனபாண்டியன் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து பாரதிராஜாவை கொலை செய்தது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

திருமங்கலம் துணை சூப்பிரண்டு வசந்தகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி தப்பிச்சென்ற 6 பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story