உயிரை பணயம் வைத்து ஆறுகளில் மூழ்கி மணலை கொள்ளையடிக்கும் இளைஞர்கள்
இளைஞர்களுக்கு மதுவும், உணவுமே கூலியாக வழங்கப்படுகிறது. உயிரை பணயம் வைத்து ஆறுகளில் மூழ்கி இளைஞர்கள் மணலை கொள்ளையடிக்கிறார்கள்.
கச்சிராயப்பாளையம்:
முத்துக்குளித்தல், முத்தெடுத்தல், முத்து வேட்டை என்பது கடலின் ஆழமான பகுதிகளில் வசிக்கும் முத்துச் சிப்பி மற்றும் நன்னீர் மட்டிகள் எனப்படும் மெல்லுடலிகளில் இருந்து முறையான மூழ்குதல் பயிற்சி மூலம் முத்தினை எடுத்து கடலின் மேற்பரப்பிற்கு கொண்டு சேர்க்கும் முறையாகும். இவ்வாறு சேகரிக்கப்படும் இயற்கை முத்துகள் விலை மதிப்பு மிக்க ஒன்பது இரத்தினங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகிறது.
கடலில் முத்து குளித்தல் போல் ஆற்றில் மூழ்கி மணல் கொள்ளையடிக்கப்படுவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?, ஆம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு பகுதியாக உள்ளது. 1,095 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட மலைப்பகுதி சராசரியாக 2,700 முதல் 4,000 அடி வரை உயரம் கொண்டது. கல்வராயன் மலையில் பல்வேறு ஓடைகள், நீர் வீழ்ச்சிகள் மற்றும் பல சிற்றாறுகள் உற்பத்தியாகின்றன. இவைகளில் பெரும் பகுதி கோமுகி, கல்படை, மட்டப்பாறை, மல்லிகைப்பாடி ஆகிய ஆறுகளில் ஒன்றிணைந்து கோமுகி அணையை வந்தடைகிறது. இந்த ஆறுகளில் மூழ்கி மணல் கொள்ளை நடக்கிறது. அது பற்றி விரிவாக பார்ப்போம்.
மதுவும், உணவுமே கூலி
அடர்ந்த வனப்பகுதியில் ஆறுகள் இருப்பதால், அவ்வளவு எளிதாக யாரும் செல்ல முடியாது. இப்படிப்பட்ட ஆறுகளுக்கு டிராக்டரில் செல்லும் வகையில் தனியாக பாதை அமைத்து மணல் கொள்ளையடிக்கப்படுகிறது.
இந்த கொள்ளைக்கு அப்பாவி இளைஞர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியூட்டும் தகவல்.
இதற்காக அவர்களுக்கு கூலியாக போதும் என்கிற அளவுக்கு மதுவும், உணவும் கொடுக்கப்படுகிறது.
இரவு 10 மணிக்கு மேல் தொடங்கும் மணல் கொள்ளை விடிய, விடிய நடக்கிறது. மேற்கண்ட ஆறுகளில் தற்போது இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் கிடக்கிறது. இந்த தண்ணீரில் மூழ்கி பிரத்யேக கூடைகளில் மணல் அள்ளப்படுகிறது. பின்னர் அதனை வெளியே கொண்டு வந்து டிராக்டர் டிப்பரில் போடுகிறார்கள்.
உயிரை பணயம் வைத்து...
இது ஆபத்து என்று தெரிந்தும் உயிரை பணயம் வைத்து இளைஞர்கள், மதுவுக்காக மணல் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். இரவில் மதுவுக்காக மணல் அள்ளப்பட்டு, பகலில் அதிக பணத்துத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது பற்றி தெரிந்தும் காவல்துறையும், வருவாய்த்துறையும் கண்டுகொள்வதில்லை.
இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி மணல் கொள்ளையில் ஈடுபடும் போது அளவுக்கு அதிகமான மதுபோதையில் தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தடுக்க வேண்டும்
ஆறுகளுக்கு உயிர் நாடி மணல். இது இருந்தால் தான் ஆற்றுநீர், மழைநீர் சேமிக்கப்பட்டு, அருகில் உள்ள கிணறுகளில் ஊற்று நீர் பெருகும், நிலத்தடி நீர் மட்டம் உயரும். ஆனால், ஆற்று மணல் இரவில் அனுமதியின்றிகொள்ளை போகிறது. இதனால், கிராமங்களில் கூட குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
ஆழ்துளை கிணறுகளில் நீர் ஊடுருவுதில்லை. இதே நிலை நீடித்தால், வருங்கால தலைமுறையினருக்கு நாம் விட்டுசெல்வது தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னையாகத்தான் இருக்கும். எனவே மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். கனிமவளத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும்.