தேர்வில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்
இந்திய ராணுவத்தால் நடத்தப்படும் தேர்வில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய ராணுவத்தால் நடத்தப்பட உள்ள அக்னிவீர் வாயு தேர்வில் கலந்து கொள்வதற்கு 17-ந் தேதி வரை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம். 13.10.23-ந் தேதி முதல் தேர்வு நடைபெறும். இணையவழி தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உதவும் வகையில் பாடத்திட்டம் மற்றும் மாதிரித்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரித்தாள்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அக்னிவீர் வாயு பணிக்கு ஆண் மற்றும் பெண் திருமணம் ஆகாதவராகவும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கில பாடத்தில் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அல்லது மூன்று வருட அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப கல்வி பயின்று குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 27.6.2003 முதல் 27.12.2006 வரையிலான காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
இந்த வாய்ப்பினை ராணிப்பேட்டை மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் வளர்மதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.