மண்டல அளவிலான விளையாட்டு போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு பல்கலைக்கழக துணைவேந்தர் வழங்கினார்
பெரியகுளத்தில் மண்டல அளில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பரிசு வழங்கினார்.
பெரியகுளம் அரசு தோட்டக்கலைக் கல்லூரியில் 'பி' பிரிவு மண்டல விளையாட்டு போட்டிகள் கடந்த 2-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற்றது. போட்டியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 12 கல்லூரிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். குழு மற்றும் தடகள போட்டி என ஒட்டுமொத்த விளையாட்டுப் போட்டிகளில் மதுரை வேளாண்மை கல்லூரி அணி முதலிடத்தையும், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி அணி 2-வது இடத்தையும் பிடித்தன.
ஆண்கள் பிரிவில் இமயம் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் லோகேஸ்வரன், பெண்கள் பிரிவில் மதுரை வேளாண்மை கல்லூரி அணி மாணவி சுகன்யா தேவி ஆகியோர் தனி நபர் சாம்பியன் பட்டத்தை வென்றனர். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்க பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி முதல்வர் ராஜாங்கம் வரவேற்று பேசினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் கூடைப்பந்து கழக நிர்வாகி சிதம்பரசூரியவேலு, சமூக அறிவியல் துறை தலைவர் சரவணக்குமார், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.