சட்டமன்ற தேர்தல் 2021 :தென்றல் தவழும் தென்காசி தொகுதி கண்ணோட்டம்


சட்டமன்ற தேர்தல் 2021 :தென்றல் தவழும் தென்காசி தொகுதி கண்ணோட்டம்
x
தினத்தந்தி 1 March 2021 9:20 AM IST (Updated: 2 March 2021 7:06 AM IST)
t-max-icont-min-icon

2021 சட்டமன்ற தேர்தலில் தென்றல் தவழும் தென்காசி தொகுதி கண்ணோட்டம் குறித்து பார்க்கலாம்.

தென்காசி மாவட்டம் தமிழக அரசின் 12.11.2019 தேதியிட்ட அரசு ஆணை எண் 427 ன் படி, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தின் தெற்கில் திருநெல்வேலி வடக்கில் விருதுநகர், கிழக்கில் தூத்துக்குடி, மேற்கே கேரளத்தையும் எல்லையாக கொண்டுள்ளது. புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் திருத்தலம் மாவட்டத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது.சங்கரன்கோவில், பொட்டல் புதூர் தர்கா, இலஞ்சி குமாரர் கோவில் ஆலையம் ஆகிய வரலாற்று சிறப்பு மிக்க புன்னிய ஸ்தலங்கள் இங்கு உள்ளது.

மாவட்டத்தின் செழிப்பூட்டும் விவசாயத்திற்கு, சிற்றாறு மற்றும் அனுமன்நதியிலிருந்து பாசனத்திற்கு செல்லும் நீரே காரணம். மேலும் குண்டாறு, அடவிநயினார், கருப்பாநதி, இராமநதி அணைகளும் பாசனத்திற்கு பெருமளவில் பயன்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் 800 மேற்பட்ட ஊரணிகள் உள்ளது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் 65% மேற்பட்ட மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

புகழ்பெற்ற குற்றால அருவி, சிற்றாற்றில் அமைந்துள்ளது. மருத்துவ குணமிக்க மூலிகை நீராக கருதப்படுகிறது. மேலும் பேரருவி, ஐந்தருவி, புலி அருவி போன்றவைகளும் இங்கு அமைந்துள்ளது.சிவனின் மறுவடிமான நடராஜரின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரை சபை சடையானது இங்கே உள்ள திருக்குற்றால நாத சாமி கோவிலில் இருக்கிறது. இதன் சிறப்பு பற்றி திரிகூடராசப்ப கவிராயர், தன்னுடைய குற்றால குறவஞ்சியில் பாடியுள்ளார்.

குற்றாலம் அருவிகளுக்கு ஆண்டுதோறும் கோடிகணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் குற்றாலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோர்  பயனடைகிறார்கள்.

வாக்காளர்கள்

தென்காசியில்1 லட்சத்து 42 ஆயிரத்து 974 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 48 ஆயிரத்து 532பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 18 பேர் என மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 524 வாக்காளர்கள் உள்ளனர். இத் தொகுதியின் மொத்த வாக்குசாவடிகள் 326.

தென்காசி தொகுதியில் தென்காசி மற்றும் வீரகேரளம்புதூர் ஆகிய இரண்டு வட்டங்கள் உள்ளன.

தென்காசி நகரசபை, தென்காசி யூனியன், சுந்தரபாண்டியபுரம், இலஞ்சி, மேலகரம், குற்றாலம் ஆகிய நகர பஞ்சாயத்துகள் இந்த தொகுதியில் உள்ளன. இதுதவிர வீரகேரளம்புதூர், ராஜகோபாலபேரி, வாடியூர், அச்சன்குளம், கருவந்தா, ஊத்துமலை, மேலமருதப்பபுரம், நவநீதகிருஷ்ணபுரம், மேலக்கலங்கல், கலங்கல், குறிச்சான்பட்டி, முத்தம்மாள்புரம், ருக்மணியாபுரம், காவலாக்குறிச்சி, மருதன்குளம், வீராணம், குலயனேரி, குத்துக்கல்வலசை, ஆனைகுளம் ஆகிய ஊர்கள் தென்காசி தொகுதியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.பாட்டாக்குறிச்சி, திருச்சிற்றம்பலம், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குணராமநல்லூர், பாட்டப்பத்து, ஆயிரப்பேரி, மத்தளம்பாறை, சில்லரைப்புரவு, கல்லூரணி, திப்பணம்பட்டி, ஆவுடையானூர் ஆகிய பஞ்சாயத்துகளும் இந்த தொகுதியில் உள்ளன.

முந்தைய தேர்தல்

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில்1952-இல்காங்கிரஸ்கட்சியைச்சேர்ந்தசுப்பிரமணியம் பிள்ளை, 1957-இல் சுயேச்சை வேட்பாளர் ஏ.கே. சட்டநாதகரையாளர், 1962-இல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ.ஆர்.சுப்பையா முதலியார், 1967ல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ. சிதம்பரம்பிள்ளை, 1971-இல் திமுகவைச் சேர்ந்த சம்சுதீன் என்ற கதிரவன், 1977-இல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.முத்துசாமிகரையாளர், 1980-இல் அதிமுகவைச்சேர்ந்த ஏ.கே.சட்டநாத கரையாளர், 1984-இல் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த டி.ஆர்.வேங்கடரமணன், 1989மற்றும்1991-இல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சா.பீட்டர் அல்போன்ஸ், 1996-இல் தமாகாவைச்சேர்ந்த கே.ரவிஅருணன்,


2001-இல் அதிமுகவைச்சேர்ந்த கே.அண்ணாமலை, 2006-இல் திமுகவைச் சேர்ந்த வீ.கருப்பசாமி பாண்டியன், 2011-இல் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் நடிகர் ஆர்.சரத்குமார், 2016-இல் அதிமுகவைச் சேர்ந்த எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இத்தொகுதியில் 7 முறை காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களும், 3 முறை அதிமுக வேட்பாளர்களும், திமுக வேட்பாளர்கள் இருமுறையும், சுயேட்சை வேட்பாளர், தமாகா மற்றும் சமத்துவ மக்கள் கட்சி  வேட்பாளர் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.



2016 கடந்த தேர்தல் வெற்றி விவரம்


கோரிக்கைகள்

இத்தொகுதியைப்பொருத்தவரையில் நாடார்,முக்குலத்தோர்,முஸ்லீம், தலித் வாக்குகள் அதிகமாக உள்ளன. 2016 சட்டப்பேரவைத்தேர்தலின்போது இத்தொகுதி ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதான கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து போட்டியிட்டனர். தற்போது  தென்காசி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

குற்றாலத்தை சர்வதேச அளவிலான சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இத்தொகுதியில் குறிப்பிட்டு சொல்லும் வகையில் ஒரு தொழிற்சாலைகூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தென்காசி தொகுதியைப் பொருத்தவரையில் அதிமுக,திமுக,காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மிகவும் பலம் வாய்ந்தவையாகும். இதுதவிர அமமுக, பாஜக, தமுமுக, எஸ்டிபிஐ போன்ற கட்சிகளும் குறிப்பிடத்தக்க அளவிலான வாக்கு வங்கிகளை கொண்டு உள்ளன.


Next Story