அதிமுக விருப்ப மனுக்கள் வரும் 3ஆம் தேதி, மாலை 5 மணி வரை மட்டுமே பெறப்படும் - அதிமுக தலைமை அறிவிப்பு
அதிமுக விருப்ப மனுக்கள் வரும் 3ஆம் தேதி, மாலை 5 மணி வரை மட்டுமே பெறப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்.6-ந் தேதி நடைபெற உள்ளது. இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ளதால், அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளை வேகமாக மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி அதிமுக சார்பில் வேப்டாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் அதிமுகவினருக்கு கடந்த 24 தேதி முதல் விருப்ப மனு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விருப்பமனுக்கள் மார்ச் 5-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விருப்பமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை குறைத்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்,
"தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல்கள், நடைபெற உள்ளதை முன்னிட்டு, தலைமைக் கழகத்தில் கடந்த 24-02-2021 முதல் அதிமுகவின் சார்பில் வேப்டாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் அதிமுகவினருக்கு விருப்ப மனு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
6-04-2021 அன்று, சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல்கள் நடைபெறும் என்று, இந்தியத் தேர்தல் ஆணையம் கால அட்டவணை வெளியிட்டுள்ள நிலையில், அதிமுகவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரும், அதிமுகவினருக்கு 03-03-2021 வரை, புதன்கிழமை மட்டுமே விண்னப்பப் படிவங்கள் வழங்கப்படும் என்றும், அவ்வாறு வழங்கப்படும் அனைத்து விண்ணப்பப் படிவங்களையும் பூர்த்தி செய்து அன்றைய தினமே மாலை 5 மணிக்குள் கண்டிப்பாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இந்த காலக்கெடு எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்".
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story