தொகுதி கண்ணோட்டம்: கொளத்தூர் சட்டமன்ற தொகுதி
தமிழகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள தொகுதிகளில் ஒன்று, சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதி
மிழகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள தொகுதிகளில் ஒன்று, சென்னை கொளத்தூர். இந்த கொளத்தூர் தொகுதி, தொகுதி மறு சீரமைப்பின் கீழ் 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக புதிதாக உருவாக்கப்பட்டது. வில்லிவாக்கம் தொகுதியில் இருந்த சில பகுதிகளையும், நீக்கப்பட்ட புரசைவாக்கம் தொகுதியில் இருந்த சில பகுதிகளையும் உள்ளடக்கி கொளத்தூர் தொகுதி வடிவமைக்கப்பட்டது.
கொளத்தூர், செந்தில்நகர், சண்முகம் நகர், சீனிவாசா நகர், கொளத்தூர் மக்காராம் தோட்டம், ராஜன்நகர், லட்சுமி நகர், என்.வி.எம்.நகர் ஏரிக்கரை, கொளத்தூர் சுப்பிரமணியபுரம், மகாவீர்நகர், தில்லை நகர், செல்வி நகர், தென்பழனி நகர், அம்பேத்கர் நகர், தயாளு நகர், இந்திரா நகர், ரங்கதாஸ் ரெட்டி காலனி, நேதாஜி நகர், ஜானகிராம் ரெட்டி காலனி, முருகன் நகர், ஜி.கே.எம்.காலனி, கம்பர் நகர், மாங்காளி நீதிமான் நகர், செல்லியம்மன் நகர், பெரவள்ளூர், ஜவஹர் நகர், வெற்றி நகர், பேப்பர் மில்ஸ் ரோடு, அகரம், பெரியார் நகர், செம்பியம், பூம்புகார்நகர் உள்பட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியது இந்தத் தொகுதி.
2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலை கொளத்தூர் தொகுதி முதல்முறையாக சந்தித்தது. தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளராக இருந்த மு.க.ஸ்டாலினும், அ.தி.மு.க. சார்பில் சைதை துரைசாமியும் களம் கண்டனர். இதில், தி.மு.க. வேட்பாளர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். முதல் தேர்தலிலேயே கொளத்தூர் தொகுதி வி.ஐ.பி. தொகுதிகளின் பட்டியலில் இடம் பிடித்தது.
2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தி.மு.க. சார்பில் மீண்டும் மு.க.ஸ்டாலினே போட்டியிட்டார். அ.தி.மு.க. தரப்பில் ஜே.சி.டி.பிரபாகர் களம் இறக்கப்பட்டார். இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலினே 37,730 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அ.தி.மு.க.வை தவிர, தே.மு.தி.க., பா.ஜ.க., பா.ம.க. வேட்பாளர்கள் உள்பட 22 பேர் டெபாசிட் இழந்தனர்.
வாக்கு விவரம்:
மொத்த வாக்குகள் 2,59,750
பதிவான வாக்குகள் 1,68,359
மு.க.ஸ்டாலின் (தி.மு.க.) 91,303
ஜே.சி.டி.பிரபாகர் (அ.தி.மு.க.) 53,573
தற்போது, மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தலைவராக பதவி உயர்வு பெற்றாலும், அவ்வப்போது தொகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொள்வதையும், நலத்திட்ட உதவிகள் வழங்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். கொரோனா காலத்திலும் தொகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இது மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை கொடுத்துள்ளது.
கொளத்தூர் ஏழை, நடுத்தர மக்கள் வசிக்கும் தொகுதியாகும். மத்திய, மாநில அரசு ஊழியர்களும் அதிகமாக வசிக்கும் பகுதியாக விளங்குகிறது. நாடார், முதலியார், வன்னியர், நாயுடு, எஸ்.சி., எஸ்.டி. சமுதாய மக்கள் அதிகளவு வசிக்கும் தொகுதியாக உள்ளது. முஸ்லிம், கிறிஸ்தவ மக்களும் அதிகளவில் வசிக்கின்றனர். இதுமட்டுமின்றி, பிற மொழி பேசும் மக்களும் 20 சதவீதம் உள்ளனர்.
தொழிற்சாலைகளோ, நிறுவனங்களோ இல்லாத கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரையில், மின் வினியோகம், குடிநீர் வசதி, ரேஷன் வினியோகம், அரசு மருத்துவ வசதி, பள்ளி-கல்லூரி வசதிகள் போன்றவை திருப்திகரமாக இருப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், போதிய மின் விளக்கு வசதிகள் இல்லை என்றும், சாலை வசதிகள் மோசமாக இருப்பதாகவும், ஆக்கிரமிப்புகளால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர் கதையாகி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
ரெட்டேரி சந்திப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் ஒரு பகுதியில் போக்குவரத்து தொடங்கிவிட்டது. ஆனால், மற்றொரு பகுதியில் இன்னும் பணிகள் முடியாததால், போக்குவரத்து தொடங்க முடியாத நிலை இருக்கிறது. எனவே, விரைவாக அந்தப் பணிகளை முடித்து, அப்பகுதி போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதேநேரத்தில், மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-வது வழித்தடமான மாதவரம் - கோயம்பேடு பாதை கொளத்தூர் தொகுதி வழியாகத்தான் செல்லும் வகையில், திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தத் திட்டத்தையும் அப்பகுதி மக்கள் ஆர்வத்தோடு எதிர்நோக்கி உள்ளனர். இதன் மூலம் சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு போக்குவரத்து எளிதாகும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது கொளத்தூர் தொகுதியில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 913 வாக்காளர்கள் இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில், புதிய வாக்காளர்கள், இடம் பெயர்ந்து வந்தவர்கள் என 20 ஆயிரத்து 386 பேர் அதிகரித்துள்ளனர். எனவே, இவர்களும், 20 சதவீதம் உள்ள பிறமொழி பேசும் மக்களும்தான் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளனர்.
Related Tags :
Next Story