அ.ம.மு.க.வை கூட்டணியில் சேர்க்க வேண்டும் அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. ஆலோசனை
அ.ம.மு.க.வை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. ஆலோசனை வழங்கி வருகிறது.
சென்னை
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பால் அரசியல் கட்சிகள் பரபரப்படைந்துள்ளன.
அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு பெரிய கட்சிகளும் அவசர அவசரமாக கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. 2 கட்சிகளிலுமே இன்னும் கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. அ.தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை, பா.ம.க.வுக்கு மட்டும் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் 28-ந் தேதி தமிழகம் வந்திருந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அன்று இரவு சென்னையில் தங்கியிருந்தபோது அவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.
அமித்ஷா அவர்களிடம், ‘சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அதற்கு அ.ம.மு.க.வையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு சில தொகுதிகளில் வாக்கு வங்கி உள்ளது. அந்த வாக்குகள் நமக்கு எதிராக பிரிந்துவிடக்கூடாது’ என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘அ.ம.மு.க. நமது கூட்டணிக்கு தேவையில்லை. தேவேந்திர குல வேளாளர் அறிவிப்பால், தென் மாவட்டங்களில் உள்ள வாக்குகளும், விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பால் டெல்டா மாவட்டங்களில் உள்ள வாக்குகளும், வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு அறிவிப்பால் வட மாவட்டங்களில் உள்ள வாக்குகளும் நமக்கு கிடைக்கும். நமக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது’ என்று கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அ.ம.மு.க.வை சேர்த்துக்கொண்டு போட்டியிட்டால்தான் வெற்றி கிடைக்கும் என்ற கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இருந்தாலும் பா.ஜ.க. தரப்பில், ‘சில தொகுதிகளில் அ.ம.மு.க.வுக்கு வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறது. கூட்டணியில் அவர்களை சேர்க்கவில்லை என்றாலும், பா.ஜ.க.வுக்கு ஒதுக்கும் தொகுதிகளில், உள்ஒதுக்கீடாக நாங்கள் அவர்களுக்கு கொடுக்க தயாராக இருக்கிறோம்’ என்று அதிரடியாக தெரிவித்ததாக தெரிகிறது.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், “திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 14 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள 84 சட்டமன்ற தொகுதிகளில் அ.ம.மு.க.வுக்கு கணிசமான வாக்குகள் இருக்கின்றன. இதை சரிகட்டியாக வேண்டும் என்பதுதான் ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து' என்று கூறினார்.
இந்தநிலையில் பா.ஜ.க. கூறிய ஆலோசனையின் அடிப்படையில் அ.தி.மு.க. கூட்டணியில் அ.ம.மு.க.வும் சேர்த்துக்கொள்ளப்படுமா, இல்லையென்றால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுவதுபோல அ.ம.மு.க. இல்லாமல்தான் போட்டியிடப்போகிறார்களா என்பதற்கு தற்போது அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை அடைந்து, முடிவுகள் அறிவிக்கும் போதுதான் தெரியும்.
Related Tags :
Next Story