தமிழகத்தில் முஸ்லிம்கள் கணிசமாக உள்ள 22 தொகுதிகளில் அசாதுதீன் ஒவைசி கட்சி போட்டியிட முடிவு? முஸ்லிம்கள் வாக்குகள் பிரியுமா..?


தமிழகத்தில் முஸ்லிம்கள் கணிசமாக உள்ள 22 தொகுதிகளில் அசாதுதீன் ஒவைசி கட்சி போட்டியிட முடிவு?  முஸ்லிம்கள் வாக்குகள் பிரியுமா..?
x
தினத்தந்தி 3 March 2021 10:10 AM IST (Updated: 3 March 2021 10:14 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் முஸ்லிம்கள் கணிசமாக உள்ள 22 தொகுதிகளில் அசாதுதீன் ஒவைசியின் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது. இதனால் முஸ்லிம்களின் வாக்குகள் பிரியுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

சென்னை

ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி, தமிழகத்தில் முஸ்லிம்கள் கணிசமாக உள்ள 22 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதனால் தமிழக முஸ்லிம்களின் வாக்குகள் பிரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த நவம்பரில் நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளில் வென்று நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இதனால்தான் பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதாக கூறப்பட்டது

பீகாரைத் தொடர்ந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம், மேற்குவங்கத்தில் போட்டியிடப் போவதாக அசாதுதீன் ஒவைசி நேற்று முன்தினம் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2016 பேரவைத் தேர்தலில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி ஆகிய இரு தொகுதிகளில் ஒவைசி கட்சி போட்டியிட்டு 10,289 வாக்குகளைப் பெற்றது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத ஒவைசி கட்சி, வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக பேரவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதனால் தமிழகத்தில் முஸ்லிம்களின் வாக்குகள் குறிப்பாக உருது பேசும் முஸ்லிம்கள் வாக்குகள் பிரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் முஸ்லிம்களின் வாக்குகள் தங்கள் அணிக்கே கிடைக்கும் என்று திமுக உறுதியாக நம்புகிறது. இந்நிலையில் 22 தொகுதிகளில் ஒவைசி கட்சி போட்டியிடுவதால் முஸ்லிம்களின் வாக்குகள் பிரிந்து திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, “தமிழகத்தின் அரசியல் சூழல் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்டது. இங்கு திமுக கூட்டணிக்குதான் முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள். ஒவைசி கட்சியால் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது" என்றனர்.

Next Story