அரசியலில் இருந்து சசிகலா விலகல்: தமிழக தேர்தலில் எந்த வித தாக்கத்தை ஏற்படுத்தும்...!
தான் அரசியலை விட்டே விலகுவதாகவும், ஜெயலலிதா ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வதாகவும் சசிகலா திடீரென கூறியுள்ளார்.
சென்னை
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடக்க உள்ள சூழ்நிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து வி.கே.சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை ஆனார்.
கடந்த மாதம் (பிப்ரவரி) 8-ந்தேதி சென்னை வந்த சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு சசிகலா சென்னை தியாகராயநகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார்.
கடந்த மாதம் 24-ந்தேதி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி தியாகராயநகரில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அவர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
அப்போது பேசிய சசிகலா, ‘தமிழக மக்கள், தொண்டர்களின் வேண்டுதலால் நலம் பெற்று திரும்பியிருக்கிறேன். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். விரைவில் தொண்டர்கள், பொதுமக்களையும் சந்திக்க நான் வருவேன்' என்று தெரிவித்து இருந்தார். அவரது பேச்சு தமிழக அரசியல் அரங்கில் மட்டுமின்றி அ.தி.மு.க.விலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டசபை தேர்தலில் சசிகலா எத்தகைய முடிவை எடுப்பார் என்று விவாதிக்கப்பட்டு வந்த வேளையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அரசியல் பிரமுகர்கள் சசிகலாவை சந்தித்து பேசினர்.
இதற்கிடையே அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்ப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருவதாக கூறப்பட்டது.
இந்த சூழ்நிலையில், தான் அரசியலை விட்டே விலகுவதாகவும், ஜெயலலிதா ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வதாகவும் சசிகலா திடீரென கூறியுள்ளார். இது குறித்து வி.கே.சசிகலா நேற்றிரவு வெளியிட்டுள்ள அந்த பரபரப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நான் என்றுமே வணங்கும் என் அக்கா ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு இணங்க, அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர ஒரு தாய் வயிற்று பிள்ளைகளான, ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.
நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று ஜெயலலிதா நமக்கு காட்டிய, தி.மு.க.வை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அவரின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
என் மீது அன்பும், அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் உண்மைத்தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.
நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்துக்காகவோ, அதிகாரத்துக்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.
நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கி வரும் என் அக்கா ஜெயலலிதாவிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சசிகலா திடீரென அறிவித்துள்ள நிலையில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறி இருப்பதாவது:-
தான் ஒதுங்கி இருந்தால் தான் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பதை தெரிந்து இந்த முடிவை எடுத்து அறிவித்து இருக்கிறார்.
தேர்தல் களத்தில் தான் ஒரு பேசுபொருளாக இருக்க அவர் விரும்பவில்லை என்பதால் இத்தகைய முடிவை எடுத்திருக்கிறார்.
ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமையவேண்டும் என அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய சுயமான முடிவு இது. எனது சித்தி என்பதற்காக அவர் மீது எனது கருத்துகளை நான் திணிக்க இயலாது. அவரின் மனசாட்சியாக நான் பேசவும் முடியாது" என கூறி உள்ளார்.
அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.சசிகலா அறிவித்துள்ள நிலையில் அதற்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சசிகலா மீதான வழக்குகள் எல்லாம் மத்திய அரசின் அமைப்புகளால் தொடரப்பட்டது என்பதால், சசிகலா அரசியலில் தனித்து இயங்கினால் அது அதிமுக கூட்டணிக்கு பாதகமாகிவிடுமோ என்று அஞ்சுவதாலும், அதனால் மத்திய அரசின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டியிருக்குமோ எனக் கலங்குவதாலும் அவர் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக ஒருதரப்பு தெரிவிக்கின்றது.
இன்னும் சிலர், அவர் உடல்நலம் சார்ந்து எடுக்கப்பட்ட இயல்பான முடிவு என்று சொல்கின்றனர்.
மற்றுமொரு தரப்பு அரசியல் விமர்சகர்கள், தேர்தல் நெருங்குவதால் சசிகலா இப்படி ஒரு தற்காலிக முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறுகின்றனர்.
ஆனால், தனது விலகல் குறித்து ஆழமான விளக்க அறிக்கை வெளியிட்டுள்ள சசிகலா, திமுக எனும் பொது எதிரியை ஒழிக்க உண்மைத் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டிய தருணம் என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்.
சசிகலா அரசியலில் தனித்து இயங்கினால் அது அதிமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தேர்தல் கருத்து கணிப்புகளும், அரசியல் விமர்சகர்களும் சுட்டிக்காட்டி வந்தனர். தற்போது சசிகலாவின் இந்த அறிவிப்பு அதிமுகவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story