திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பதற்கு காரணம் என்ன ...?
கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்டு வலியுறுத்துவதால் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை
தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் என மொத்தம் 5 தொகுதிகள் இரு கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த 2 கட்சிகள் தவிர, ம.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனும் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. அதுபோல, காங்கிரஸ் கட்சியுடனும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலவுகிறது.
நேற்று மாலை தொகுதிப் பங்கீடு பேச்சு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணி கட்சிகளுடன் திமுக எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.
விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை குழுவில் இருப்பவர்கள் நேர்காணல் நடத்தும் குழுவிலும் இருப்பதால் நேற்று பேச்சு நடைபெறவில்லை என கூறப்படுகிறது.
காங்கிரசுக்க்கான தொகுதிகளை முடிவு செய்த பிறகு மற்ற கட்சிகளுக்கான தொகுதிகளை உறுதி செய்ய திமுக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் எதிர்பார்ப்பதை விட குறைவான தொகுதிகளை அக்கட்சிக்கு ஒதுக்கிவிட்டால், அதையே காரணமாகக் கூறி மதிமுக, விசிக, இடதுசாரிகளுக்கு தலா ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கி உடன்பாடு செய்து விடலாம் என்று திமுக திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளின் வேட்பாளர்கள் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க வலியுறுத்துகிறது.
இந்த விவகாரமும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பதற்கு காரணம் என்று தெரிய வருகிறது.
உதயசூரியன் சின்னத்தில் தங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என்பதை அந்த கட்சிகள் விரும்பவில்லை. சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்கள்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளும் இரட்டை இலக்கமே எங்கள் இலக்கு என்று கூறி வருகின்றனர்.
தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை வெளியீடு என பல தேர்தல் பணிகள் இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளுமே கூடுதல் தொகுதிகளை கேட்பதால் கூட்டணி பேச்சுவார்த்தையே இன்னும் முடிவுக்கு வராமல் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகளில் இழுபறி நீடித்து வருகிறது.
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் 170-க்கும் அதிகமாக தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளன. இந்த சூழ்நிலையில் கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்டு வலியுறுத்துவதால் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story