கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் வாக்களிக்க ஒரு மணி நேரம் ஒதுக்கீடு - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்


கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் வாக்களிக்க ஒரு மணி நேரம் ஒதுக்கீடு - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 4 March 2021 1:50 PM IST (Updated: 4 March 2021 1:50 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் சட்டப்பேரவை தேர்தலில், கடைசி ஒரு மணி நேரத்தில் பாதுகாப்பு கவச உடையுடன் வந்து வாக்களிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. முக்கிய கட்சிகளின் தேர்தல் கூட்டணி முடிவான நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஆளும் கட்சியான அ.தி.மு.க.வை பொறுத்தவரை பா.ம.க.வுடன் தொகுதி உடன்பாடு முடிவடைந்த நிலையில் பா.ஜ.க. மற்றும் தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தி.மு.க.வும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதற்கிடையே கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்கும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. இதனிடையே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் வாக்களிக்கலாமா? என்ற கேள்விகள் எழுந்து வந்தன.

இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் வாக்களிக்க ஒரு மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் பாதுகாப்பு கவச உடையுடன் வந்து வாக்களிக்கலாம். கொரோனா நோயாளிகள் பாதுகாப்பு வழிமுறைகளுடன் வாக்களிக்கலாம். தமிழகம் முழுவதும் மார்ச் 3ம் தேதி வரை ரூ.11 கோடி மதிப்பிலான பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story