பழமையான ராயபுரம் சட்டமன்ற தொகுதி கண்ணோட்டம்


பழமையான ராயபுரம் சட்டமன்ற தொகுதி கண்ணோட்டம்
x
தினத்தந்தி 5 March 2021 1:56 AM GMT (Updated: 5 March 2021 1:56 AM GMT)

ராயபுரம் தொகுதிக்கு இதுவரை நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க. 7 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

சென்னையில் உள்ள பழமையான சட்டமன்ற தொகுதிகளில் ராயபுரமும் ஒன்று. இந்த தொகுதியில் 1957, 1962-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் மாயாண்டி வெற்றி பெற்றார். ஆனால், 1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தி.மு.க. வேட்பாளர் வேதாச்சலம் வெற்றி வாகை சூடினார். 1971-ம் ஆண்டு தேர்தலிலும் வேதாச்சலமே மீண்டும் வெற்றி பெற்றார். 

1977-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மாற்றப்பட்டார். புதிதாக களம் இறங்கிய பி.பொன்னுரங்கம் அந்தத்தேர்தலிலும், 1980, 1984-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலிலும் தொடர் வெற்றி பெற்றார். 1989-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் ஆர்.மதிவாணன், 1991-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் டி.ஜெயக்குமார், 1996-ம் ஆண்டு மீண்டும் தி.மு.க. வேட்பாளர் ஆர்.மதிவாணன், 2001-ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க. வேட்பாளர் டி.ஜெயக்குமார் என மாறி மாறி வெற்றி பெற்றனர். அதன்பிறகு, 2006, 2011, 2016 என தொடர்ந்து நடந்த 3 தேர்தல்களில் அ.தி.மு.க. வேட்பாளர் டி.ஜெயக்குமாரே வெற்றி பெற்றார்.

ராயபுரம் தொகுதிக்கு இதுவரை நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க. 7 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. அதிக வெற்றிகளின் அடிப்படையில் பார்த்தால் ராயபுரம் தொகுதியில் தி.மு.க.வுக்கு செல்வாக்கு இருப்பதுபோல் தெரிகிறது. ஆனால், 2001-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடந்த 4 சட்டமன்ற தேர்தல்களிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றுள்ளது. அதுவும், தற்போதைய மீன்வளத்துறை அமைச்சரான டி.ஜெயக்குமாரே 4 முறையும் களம் கண்டு வெற்றி பெற்றுள்ளார்.

வடசென்னையில் கடற்கரையோர தொகுதியான ராயபுரத்தில், 2004-ம் ஆண்டு சுனாமி பேரழிவின்போது, பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. கடலரிப்பு போன்ற கடலினால் ஏற்படும் பிரச்சினைகள் அதிகம். அதுமட்டுமின்றி, சென்னை துறைமுகத்துக்கு சரக்கு ஏற்ற வரும் கன்டெய்னர் லாரிகளால், காசிமேடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாகிவிட்டது. கன்டெய்னர் லாரிகளுக்கு என தனியாக பாதை அமைக்கப்பட்டாலும், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் என்பது எதிர்பார்த்த அளவு குறையவில்லை.


ராயபுரம் தொகுதிக்கு என்று தனி பாரம்பரியம் உண்டு. அதாவது தென்னிந்தியாவில் முதல் ரெயில் நிலையம் அமைக்கப்பட்டது ராயபுரத்தில்தான். 1856-ம் ஆண்டு இங்கிருந்து வாலாஜாவுக்கு முதல்முதலாக ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. எனவே, ராயபுரம் ரெயில்நிலையத்தை 3-வது ரெயில் முனையமாக மாற்ற வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். இதனால், அப்பகுதியில் தொழில் வளர்ச்சி அடையும் என்றும் நம்புகின்றனர். ஆனால், கோரிக்கைதான் இன்னும் நிறைவேறியபாடில்லை.

ராயபுரம் தொகுதியில் வடசென்னையில் பெரிய அரசு ஆஸ்பத்திரியான, ஸ்டான்லி ஆஸ்பத்திரியும், ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியும் உள்ளன. இந்த ஆஸ்பத்திரிகளை மேலும் தரம் உயர்த்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. குடிநீர் பிரச்சினையும் ஆங்காங்கே உள்ளது. சாலைகள் ஆக்கிரமிப்பு, பழுதடைந்த சாலைகள் பிரச்சினை பொதுவாக உள்ளது.

ராயபுரம் தொகுதியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 43 முதல் 53 வரையிலான வார்டுகள் இடம் பெற்றுள்ளன. இந்த தொகுதியில் அதிகமாக மீனவர்கள் 55 சதவீதத்தினர் வசிக்கின்றனர். நாடார், வன்னியர், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களும் குறிப்பிடும்படி இருக்கின்றனர். எனவே, வெற்றியை கணிக்கும் சக்தியாக மீனவ சமுதாய மக்களே இந்த தொகுதியில் விளங்குகிறார்கள்.

ராயபுரம் தொகுதியை பொறுத்தவரை, தொடக்கத்தில் காங்கிரஸ், பிறகு தி.மு.க., தற்போது அ.தி.மு.க. என வெற்றி பெற்று வருகின்றன. கடைசியாக 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் டி.ஜெயக்குமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளரான ஆர்.மனோகரை 8,031 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா. கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் உள்பட 15 பேர் டெபாசிட் இழந்தனர்.

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்

மொத்த வாக்காளர்கள் 1,92,215

பதிவான வாக்குகள் 1,22,225

டி.ஜெயக்குமார் (அ.தி.மு.க.) 55,205

ஆர்.மனோகர் (காங்கிரஸ்) 47,174

2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, ராயபுரம் தொகுதியில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 215 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால், அதன்பிறகு புதிய வாக்காளர்கள், இடம் பெயர்ந்து வந்தவர்கள் என வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்க வேண்டும். ஆனால், வினோத நிகழ்வாக, ராயபுரம் தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கை 1,009 பேர் குறைந்துள்ளனர். இரட்டை வாக்காளர்கள், போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டது இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அதாவது, தற்போதைய வாக்காளர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 91 ஆயிரத்து 206 என்ற அளவிலேயே இருக்கின்றது. என்றாலும், ராயபுரம் தொகுதியில் அ.தி.மு.க.வின் கையே சற்று ஓங்கியுள்ளது.

Next Story