தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு மின்னணு மூலம் பணப் பரிமாற்றம் செய்தாலும் புலனாய்வின் மூலம் கண்டுபிடிக்கப்படும்; தலைமைத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை


தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
x
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
தினத்தந்தி 6 March 2021 5:55 AM IST (Updated: 6 March 2021 5:55 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு மின்னணு மூலம் பரிமாற்றம் செய்தாலும் புலனாய்வின் மூலம் கண்டுபிடிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செலவீனப் பார்வையாளர்கள் வருகை

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு பறக்கும்படை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 4-ந் தேதிவரை மாநிலம் முழுவதும் கணக்கில் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட மொத்தம் ரூ.15.20 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பிடிக்கப்பட்டன. இதில் பணம் மட்டும் ரூ.14.13 கோடியாகும். இதுவரை பிடிபட்ட தங்கத்தின் அளவு குறைவாக உள்ளது. ஆனால் ரூ.38 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பிடிபட்டுள்ளது.

முதலில் தேர்தல் சிறப்பு செலவீனப் பார்வையாளர்களான மது மகாஜன், பாலகிருஷ்ணன் ஆகியோர் சென்னைக்கு விரைவில் (8-ந் தேதி) வரவுள்ளனர். இங்கு வந்ததும் அவர்கள் தங்களின் பணியைத் தொடங்குவார்கள்.

எளிதாக கண்டுபிடிக்கலாம்

வாக்காளர் தகவல் சீட்டில், அவர்களைப் பற்றிய தகவல்கள், அவர்களின் இருப்பிட விபரம், வாக்களிக்க வேண்டிய மையம் ஆகியவற்றின் விவரங்கள் இடம்பெற்றிருக்கும். புகைப்படத்தை அச்சிட வேண்டாம் என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவாகும். அது ஏன் என்று தெரியவில்லை.

ஆனால் வாக்களிக்கும்போது அதை அடையாள ஆவணமாக பயன்படுத்த முடியாது. தகவலுக்கான சீட்டாக பயன்படுத்திக் கொள்ளலாம். வாக்களிக்கும் நேரம் எதையும் அச்சிட்டிருந்தால் அது தவறானது.

‘கூகுள் பே’ மூலம் பணப்பட்டுவாடா செய்தாலும், அதை அறிந்துவிட முடியும். ஏனென்றால், ஏதாவது வங்கியின் மூலமாகத்தான் அதை அனுப்ப முடியும். வழக்கமாக இல்லாமல் திடீரென்று அதிக தொகை அனுப்பப்பட்டால் அதை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்.

பெரிய தொகை இல்லாமல் ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் என சிறிய தொகைகள், பலரது வங்கிக் கணக்கில் இருந்து பிரித்து அளிக்கலாமே என்று கேட்கிறீர்கள். இதை ஒருங்கிணைத்து செயல்படுத்தலாம். ஆனால் ஒருவர் சிறிய தொகையை பலருக்கு அனுப்பும்போது கண்டுபிடித்துவிட முடியும். பெரிய தொகையை பலர் ஒன்று சேர்ந்து சிறிய தொகையாக பிரித்து, அவர்கள் மூலம் பணப்பட்டுவாடா செய்யலாம்.

புலன் விசாரணை

பொதுவாக மின்னணு என்ற எலக்ட்ரானிக் முறையில் பணப்பரிமாற்றம் செய்வது ரகசியமானது அல்ல. இதுபோன்ற நேர்வுகளில் சந்தேகம் ஏற்பட்டால் புகார் அளிக்க வேண்டும். நாங்கள் சம்பந்தப்பட்ட ‘கூகுள் பே’-க்கும் வங்கிக் கணக்கு உண்டு. அதன் மூலம் பணம் அனுப்பப்படும் கணக்கிற்கும் வங்கி உண்டு. எனவே புலன் விசாரணை மூலம் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டுபிடிக்கலாம். இதுபோன்ற விசாரணையில் வருமான வரித்துறையும் ஈடுபடுத்தப்படும்.

அதுபோன்ற தகவல் எதுவும் இருந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம். ஏனென்றால், இதுபோன்ற குற்றங்களை கண்டுபிடிக்கும் புலனாய்வு அதிகாரிகளுடன் நாங்கள் நெருக்கமான ஒருங்கிணைப்பை வைத்துள்ளோம். தேர்தல் செலவு விஷயத்தில் தமிழகம் மிகுந்த பிரச்சினைக்குரிய மாநிலமாக உள்ளது. சிறப்பு செலவீனப் பார்வையாளர்களுக்கு இதுபற்றிய முழு விபரங்களும் தொடர்ந்து அளிக்கப்படும்.

இதற்கென்று தனி புலனாய்வு பிரிவு உள்ளது. யார் என்ன செய்கிறார்கள்? என்பதை அந்தப் பிரிவு ஆய்வு செய்து கொண்டே இருக்கும். சமீபத்தில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். எனவே பணத்தை பலர் மூலம் பிரித்து வாக்காளர்களுக்கு சிறு சிறு தொகைகளாக வழங்கும் நடவடிக்கைகளும் அவர்களின் புலனாய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுவிடும். கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

செலவீனப் பகுதிகள்

சில இடங்களில் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருவதாக நீங்கள் கூறுகிறீர்கள். மற்ற அரசியல் கட்சிகளும் அதில் விழிப்பாக இருக்கும். இதுபற்றி தெரியவந்தால், உடனடியாக புகார்களை அளிக்கலாம். ‘சி-விஜில்” என்ற செல்போன் செயலியும் இதுபோன்ற புகார்களைப் பெற தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை மிகக் குறைந்த அளவில்தான் சி-விஜிலில் புகார்கள் வந்துள்ளன.

சட்டம் ஒழுங்கு தொடர்பான பதற்றத்துக்குரிய பகுதிகளை கண்டறியும் நேரத்தில், தேர்தல் செலவில் கவனம் பெறும் பகுதிகளையும் நாங்கள் கண்டறிவோம். அந்தந்த தொகுதிகளில் வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டதும், அதுபோன்ற பகுதிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி, போலீஸ் சூப்பிரண்டு, செலவீனப் பார்வையாளர்கள் அடையாளம் காண்பார்கள்.

அப்படி அடையாளம் காணப்படும் பகுதிகள் பற்றி தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளிப்பார்கள். அதன் பின்பு அந்த பகுதி, கண்காணிப்புக்குள் கொண்டு வரப்படும்.

மாறுபடும் தொகுதிகள்

தேர்தல் செலவு விவகாரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகுதி, கடந்த தேர்தலைப் போன்று இந்த தேர்தலில் இருக்கப்போவதில்லை. அது நாளுக்கு நாள் மாறுபடக்கூடிய ஒன்று. போட்டியிடும் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்கள் யார்? என்பது உள்பட அனைத்து விபரங்களையும் ஆய்வு செய்துதான் முடிவு செய்வார்கள். அந்தத் தொகுதியில் முன்பு நடந்த தேர்தல்களில் பதிவு செய்யப்பட்ட விவரங்களையும் கவனிப்பார்கள்.

உதாரணமாக, ஒரு தேர்தலில் ஆர்.கே.நகர், செலவீனப் பிரச்சினைக்குட்பட்ட தொகுதியாக காணப்பட்டது. ஆனால் அந்தத் தொகுதி இந்தத் தேர்தலிலும் அதுபோன்றிருக்குமா? என்று இப்போதே சொல்ல முடியாது. தேர்தலுக்கு தேர்தல் அது மாறும். இதைத்தான் மாவட்ட தேர்தல் அதிகாரி, போலீஸ் சூப்பிரண்டு, செலவீனப் பார்வையாளர்கள் ஒன்றாக அமர்ந்து மதிப்பிடுவார்கள்.

அப்படி மதிப்பிட்டு, கூடுதலாக பறக்கும்படை, நிலையான கண்காணிப்புப் படைகளை அனுப்பும்படி கோரினால் அதை இந்திய தேர்தல் ஆணையம் செய்து கொடுக்கும். கடந்த தேர்தலிலும், எங்கெல்லாம் தேர்தல் பார்வையாளர்கள் கேட்டுக் கொண்டார்களோ அங்கெல்லாம் கூடுதல் படைகள் அனுப்பப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

 


Next Story