அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் குளறுபடி இல்லை; அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
ராயபுரம் தொகுதியில் தேர்தல் பிரசார பணிகளை தொடங்கிய அமைச்சர் ஜெயக்குமார், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் எந்தவித குளறுபடியும் இல்லை என்றார்.
பிரசார பணிகளை தொடங்கினார்
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுவதாக கட்சி தலைமை அறிவித்திருந்தது. இதையடுத்து ராயபுரம் தொகுதியில் தனது தேர்தல் பிரசார பணிகளை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று தொடங்கினார். முதல்கட்டமாக ராயபுரம் தேர்தல் பணிமனை அமைய உள்ள இடத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ராயபுரம் தொகுதி கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக ராயபுரத்துக்கு வந்த அமைச்சர்
ஜெயக்குமாரை பட்டாசுகள் வெடித்து கட்சி தொண்டர்கள் வரவேற்றனர். அப்போது நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
குளறுபடி இல்லை
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பா.ம.க., பா.ஜ.க. கூட்டணி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் சில கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கூட்டணி கட்சிகளுடன் எந்தவித குளறுபடியும் இல்லை. பா.ம.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தே.மு.தி.க. சின்னம் இல்லாமல் அறிவித்திருப்பது எந்தவித பிரச்சினையும் இல்லை. ஒரே நோக்கத்துடனே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
கூட்டணி பலம்
சிறுபான்மையினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தது அ.தி.மு.க. அரசுதான். காங்கிரஸ் முதலாளித்துவ கட்சி என கூறிய கம்யூனிஸ்டு கட்சிகள், தற்போது அதே தி.மு.க-காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். தி.மு.க. கூட்டணியில் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும், கருத்து வேறுபாடும் இல்லை. கூட்டணி முழு உருவம் பெறும்போது, கூட்டணி பலம் தெரியவரும். தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்பதையறிந்து சிறு, சிறு கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story