நிலுவையில் உள்ள, தண்டிக்கப்பட்ட குற்றவழக்கு விவரங்களை வேட்பாளர்கள் விளம்பரமாக வெளியிட வேண்டும்; தேர்தல் ஆணையம் உத்தரவு


நிலுவையில் உள்ள, தண்டிக்கப்பட்ட குற்றவழக்கு விவரங்களை வேட்பாளர்கள் விளம்பரமாக வெளியிட வேண்டும்; தேர்தல் ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 7 March 2021 1:22 AM GMT (Updated: 7 March 2021 1:22 AM GMT)

வேட்பாளர் மீது நிலுவையில் உள்ள அல்லது தண்டிக்கப்பட்ட குற்ற வழக்கு விவரங்களை, அந்த வேட்பாளரும், அவர் சார்ந்த அரசியல் கட்சியும் பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின்படி, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் குற்ற வழக்குகள் (நிலுவையில் உள்ளவை மற்றும் தண்டனை பெறப்பட்டவை) உள்ள வேட்பாளர்கள் மற்றும் குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகளை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பின்வரும் படிவங்களை வரையறுத்துள்ளது. அதன்படி, செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வேட்பாளர்கள் அதற்கான தகவல்கள் அடங்கிய சி-1 படிவத்தை வெளியிட வேண்டும்.

உறுதி மொழி படிவம்

செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மற்றும் வலைதளங்களில் அரசியல் கட்சிகள் சி-2 படிவத்தை வெளியிட வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலக பயன்பாட்டிற்கான படிவம் (சி-3 படிவம்) தரப்பட வேண்டும். குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியை வெளியீடு செய்தது தொடர்பாக வேட்பாளரின் அரசியல் கட்சிகள் அறிக்கை (சி-5 படிவம்) வெளியிட வேண்டும்.

தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலக பயன்பாட்டிற்காக சி-6 படிவம் அளிக்கப்பட வேண்டும். குற்றவழக்குகள் குறித்த உறுதிமொழியை செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் மற்றும் கட்சியின் வலைதளங்களில், வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அல்லது வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் நாளில் இருந்து 2 வாரங்களுக்கு முன்பாக, இவற்றில் எது முதன்மையானதோ அதன்படி (சி-7 படிவம்) வெளியிடப்பட வேண்டும்.

அறிக்கை

குற்றவழக்குகள் குறித்த உறுதிமொழியை வெளியீடு செய்தது தொடர்பான அரசியல் கட்சியின் அறிக்கையை வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து 72 மணி நேரத்திற்குள் அல்லது வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டதற்கு 2 வாரத்திற்கு முன்பாக, இவற்றில் எது முந்தையதோ, அதன்படி அறிக்கை (சி-8 படிவம்) அளிக்க வேண்டும்.

சிஏ படிவத்தை தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலக பயன்பாட்டிற்காக அளிக்க வேண்டும்.

3 முறை வெளியீடு

வேட்பாளர்கள் தங்களது குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் உரிய படிவங்களில் விளம்பரம் செய்ய வேண்டும். குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்களை நிறுத்தும் அரசியல் கட்சிகள், அந்த வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் மற்றும் தங்களது அரசியல் கட்சியின் வலைதளங்களிலும் உரிய படிவங்களில் விளம்பரம் செய்தல் வேண்டும்.

இந்த விளம்பரங்கள், வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாளுக்கு மறுநாள் முதல் வாக்குப்பதிவு முடிவுறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை 3 முறை வெவ்வேறு நாட்களில் வெளியிடப்பட வேண்டும்.

பத்திரிகை பட்டியல்

இது தொடர்பான இந்திய தேர்தல் ஆணையத்தின் முழுமையான அறிவுரைகள் மற்றும் பதிப்புகள் வாரியான தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகள், தொலைக்காட்சி அலைவரிசைகளின் பட்டியலை www.elections.tn.gov.in. என்ற இணையதள முகவரியில் காணலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 


Next Story