வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் வர 2 பேருக்கு மட்டுமே அனுமதி - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு


வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் வர 2 பேருக்கு மட்டுமே அனுமதி - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
x
தினத்தந்தி 8 March 2021 7:57 AM GMT (Updated: 8 March 2021 8:02 AM GMT)

வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் வர 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. முக்கிய கட்சிகளின் தேர்தல் கூட்டணி முடிவான நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள் தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளோடு தொகுதி பங்கீடுகளை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையே கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்கும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்திப்பில் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மார்ச் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் வர 2 பேருக்கு மட்டுமே அனுமதி. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதிவாகும் வாக்குகள் அனைத்தும் தமிழகத்தில் 76 மையங்களில் எண்ணப்படும். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது.

வாக்குச்சாவடிகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும். தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 1950 என்ற இலவச எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு அளிக்கலாம்.

கொரோனா பரவல் சூழ்நிலையில், வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு தனித்தனியாக கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் கையுறை வழங்கப்படும். வாக்களிக்கும்போது வாக்காளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.

வாக்களிக்க வரும் வாக்காளர்களின் உடல்வெப்பநிலை சோதிக்கப்படும். சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியிருக்கும் அளவில் உடல்வெப்பநிலை இருந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா பாதித்தவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் தற்பாதுகாப்பு உடையில் வந்து வாக்களிக்கலாம்

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story