தொகுதி பங்கீட்டில் இழுபறி: தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் நாளை விஜயகாந்த் அவசர ஆலோசனை


தொகுதி பங்கீட்டில் இழுபறி: தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் நாளை விஜயகாந்த் அவசர ஆலோசனை
x
தினத்தந்தி 8 March 2021 4:07 PM IST (Updated: 8 March 2021 4:07 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக உடனான கூட்டணி உறுதி செய்யப்படாத நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது.

சென்னை

அதிமுக-தேமுதிக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களாக நடைபெற்றுள்ளது. எனினும் இரு கட்சிகளுக்கு இடையே இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் தேமுதிக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவினர் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினர். இதையடுத்து இன்று இரு கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

தற்போது சட்டசபை தேர்தலில் தேமுதிகவிற்கு 13 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க இயலும் என்று அதிமுக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

9 தொகுதிகளில் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து தற்போது 13 தொகுதிகள் வரை அதிமுக வந்துள்ளது. 13 தொகுதிகளுக்கு மேல் எதிர்பார்க்க வேண்டாம் என்று தேமுதிகவிற்கு அதிமுக கூறிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

41 தொகுதிகள் என ஆரம்பித்து 23 தொகுதிகள் வரை பெற்றுக் கொள்ள முன்வந்ததாக தேமுதிக தரப்பில் கூறப்படுகிறது.

அதிமுக வெறும் 13 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதால் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அவசரமாக கூட்டியுள்ளது தேமுதிக. 13 தொகுதிகளை ஏற்பதா? கூட்டணியில் நீடிப்பதா? என்பது குறித்து நாளை தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.

இதற்கிடையே தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் அவசரக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக உடன் தொகுதி உடன்பாடு எட்டப்படாத நிலையில் நாளை நடைபெற உள்ள தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story