வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறை: சத்யபிரதா சாகு


வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறை: சத்யபிரதா சாகு
x
தினத்தந்தி 8 March 2021 11:47 AM GMT (Updated: 8 March 2021 11:47 AM GMT)

வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு தனித்தனியாக கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் கையுறை வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.

சென்னை

சென்னையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது:- 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். பதிவாகும் வாக்குகள் அனைத்தும் தமிழகத்தில் 76 மையங்களில் எண்ணப்படும்.

சுமார் 4.97 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 1950 என்ற இலவச எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு அளிக்கலாம்.வாக்குச்சாவடிகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.

சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது. வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும், தேர்தலின் போது தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளர் அடையாள சீட்டு மற்றும் வாக்காளர்களின் ஆதார், பான் அட்டை உள்ளிட்ட 11 அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றுடன் வாக்குச்சவாடிக்கு வந்து வாக்களிக்கலாம்.

கொரோனா சூழ்நிலையில், வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு தனித்தனியாக கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் கையுறை வழங்கப்படும். வாக்களிக்கும்போது வாக்காளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.

வாக்களிக்க வரும் வாக்காளர்களின் உடல்வெப்பநிலை சோதிக்கப்படும். சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியிருக்கும் அளவில் உடல்வெப்பநிலை இருந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

கொரோனா பாதித்தவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் தற்பாதுகாப்பு உடையில் வந்து வாக்களிக்கலாம் என்று கூறினார்.

Next Story