அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் ஒவைசி கட்சி கூட்டணி..! 3 தொகுதிகள் ஒதுக்கி டிடிவி தினகரன் அறிவிப்பு


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் ஒவைசி கட்சி கூட்டணி..!   3 தொகுதிகள் ஒதுக்கி டிடிவி  தினகரன் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 March 2021 5:51 PM IST (Updated: 8 March 2021 5:51 PM IST)
t-max-icont-min-icon

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் ஒவைசி கட்சி கூட்டணி..! ஒவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார்.

சென்னை

ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி, தமிழகத்தில் முஸ்லிம்கள் கணிசமாக உள்ள 22 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதனால் தமிழக முஸ்லிம்களின் வாக்குகள் பிரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த நவம்பரில் நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளில் வென்று நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இதனால்தான் பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதாக கூறப்பட்டது

பீகாரைத் தொடர்ந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம், மேற்குவங்கத்தில் போட்டியிடப் போவதாக அசாதுதீன் ஒவைசி நேற்று முன்தினம் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2016 பேரவைத் தேர்தலில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி ஆகிய இரு தொகுதிகளில் ஒவைசி கட்சி போட்டியிட்டு 10,289 வாக்குகளைப் பெற்றது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத ஒவைசி கட்சி, வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக பேரவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

அதன் படி ஒவைசியின் கட்சி  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் ஒவைசி கட்சிக்கு  கூட்டணி  ஏற்பட்டு உள்ளது. ஒவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்குவதாக டிடிவி  தினகரன் அறிவித்து உள்ளார். 

வாணியம்பாடி, சங்கராபுரம், கிருஷ்ணகிரி  ஆகிய தொகுதிகளில் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இருகட்சிகளுக்கிடையிலான இந்த ஒப்பந்தத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகமது ரஹமதுல்லா தாயப் மற்றும் தமிழக தலைவர் வக்கீல் அஹமது உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.அமமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கையெழுத்திட்டுள்ளார்.

Next Story